பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

315


வெள்ளிக் கிழமையன்றே வார வழிபாடு நிகழும். வார வழிபாடு நிகழ்த்த வேண்டிய காலம் மாலை ஆறு மணிக்கு என்ற நியதியை மேற்கொள்ளுதல். எல்லா ஊர்களிலும் வெள்ளிக் கிழமைதோறும் மாலை ஆறு மணிக்குக் கூடி வழிபாடு செய்வதென்ற ஒழுங்கு முறையைக் காப்பாற்ற வேண்டும். கிழமையும் குறித்த நேரமும் எக்காரணத்தைக் கொண்டும் யாருக்காகவும் மாறக்கூடாது. இந்துக்களாகப் பிறந்த யாவரும் நாடு முழுவதும் நிகழும் இந்த வார வழிபாட்டில் தவறாது கலந்து கொள்வதைக் கடமையாகக் கொண்டு ஒழுகி ஒழுங்கைக் காப்பாற்றுவோமாக.

நமது வழிபாட்டில் நம்முடைய ஆன்றோர்கள் கடைப் பிடித்தொழுகிய சில மரபுகளைக் கடைப்பிடித்தொழுக வேண்டும். திருக்கோயிலுக்கு வார வழிபாட்டுக்கு வருவோர் வரிசையில் ஒருவர் பின் ஒருவராக ஒழுங்கமைதியாக வழி பாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைப் பின் தள்ளி ஒருவர் முன் போதல் உலகியலில் வேண்டுமானால் தற்காலிகமான பயன்களைத் தரலாம். ஆனாலும் தீது, சமய வாழ்க்கையில் எல்லாம் வல்ல இறைவன் சந்நிதியில் ஒருவரைப் பின் தள்ளி ஒருவர் முந்துதல் அறமன்று, அருள் நெறியும் அன்று. அப்பரடிகள் தமக்கு முன் வந்தவர்கள் பின் தாம் திருக்கோயிலுக்குள் புகுவதாகக் கூறியுள்ளார்.

“போதோடு நீர்சுமந் தேத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்”

என்பது அப்பரடிகள் திருப்பாடல். ஆதலால் திருக்கோயில் வழிபாட்டில் வார வழிபாட்டில் கலந்து கொள்பவர் பலர் வந்து வரிசையில் ஒழுங்கமைதியுடன் நின்று சென்று வழிபாட்டை நிகழ்த்தும் ஒழுங்கு முறையைக் காப்பாற்ற வேண்டும்.