பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

319


கொள்ளாமல் அன்பு காட்ட வேண்டும். அன்பு காட்டுவதே குறிக்கோள்.

அன்பின்வழி சிலரிடத்தில் உறவு வளரலாம். சிலரிடத்தில் உறவு வளராமல் நிற்கலாம். ஆனால், அடிப்படையான அன்பு இருப்பதால் உறவு வளராது போனாலும் பகை தோன்றாது. தீமையும் தோன்றாது. ஆதலால் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமய அடிப்படையில் இந்துக்களாக வாழ்வோர் அனைவரிடமும் எந்தவித வேறுபாடும் பாராட்டாமல் அன்பாகக் கலந்து பேசிப் பழகவேண்டும். உண்ணும் பொழுதுகூட உறவு கலந்து உண்ணச் சொன்னாரே தாயுமானவர்.

ஆதலால், இந்து சமூகத்தினில் உறவு கலந்து பழகுதற்குரிய வாய்ப்புகளைத் தோற்றுவித்துக் கொள்ள வேண்டும். அவ்வழி அன்பினைக் காட்ட வேண்டும்; அன்பினைப் பெற வேண்டும். அவ்வழி இந்து சமயத்தின் உயர் கொள்கையாகிய “ஒன்றே குலம்” என்ற உயரிய கொள்கை நடைமுறைப் படுத்தப்பெற வேண்டும். அப்படியானால் ஆசாரங்கள் என்ன ஆவது? என்று சிலர் கேட்கலாம். ஆசாரமுடையவரிடம் பழகுவதன் மூலம் மற்றவரும் ஆசாரமுடையவராக மாறி வளர்வார்கள். சீலமுடையாருடன் சீலமில்லாதவர் பழகுவதன் மூலம் சீலம் பெறுவர். இதுவே நடைமுறை உண்மை. ஆதலால், இந்து சமூகத்தினிடத்தில் உறவினை வளர்ப்போம்!

உதவிகள் செய்வோம்!

மனித குலத்தின் உயிர்நிலை ஒருவருக்கொருவர் உதவி செய்தலில்தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. உயிர்க் குலத்தில் இயல்பாகவுள்ள வேறுபாடுகள் கூட உயிர்க் குலத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவையான உதவிகளை ஒருவருக்கொருவர் செய்து கொள்ளத்தான் போலும். இயற்கையில் ஒன்று புளிக்கிறது; ஒன்று காரமாக இருக்கிறது.