பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

325


கருதி அன்பு காட்ட எந்த ஒன்றும் தடையாக இருக்கக் கூடாது. இது நமது அசைக்க முடியாத நம்பிக்கை. இல்லை...இயன்ற வரையில் நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி வெற்றி தோல்விகளைக் கண்டு பலபட்டறை என்ற பெயருக்குக்கூட ஆளானோம். இந்த ஒரே காரணத்தினாலேயே நமக்கென்று ஒரு கூட்டத்தை நாம் உருவாக்கி வைத்துக்கொள்ள முடியவில்லை. நடு நிலைக்கு நாட்டில் வரவேற்பு அவ்வளவு தான். ஆயினும், நாம் இனவழி அன்பை வரவேற்கின்றோம். ஏற்றுப் போற்றுகின்றோம். இது என்ன முரண்பாடு என்று சிலர் கேட்கலாம். முரண்பாடு இல்லை என்பது நமது கருத்து. ஒரு மனிதன் உலக மனிதனாக வளர்ந்து உயரலாம்; வளர்ந்து உயர வேண்டும். ஆனால் அந்த வளர்ச்சி படிப்படியாகத்தான். கடமைப்பட்டுள்ள சூழலில் உள்ள மனித சமூகத்திற்கு அன்பு காட்டாமல் உயர முடியாது; வளர முடியாது. அங்ஙனம் சொல்வது பிழை. ஆனால் இனவழிப்பட்ட அன்பில் சிறைப்படுத்திக் கொண்டு, மற்ற இனத்தை வெறுப்பதை அல்லது அன்புகாட்ட மறுப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏற்றுக் கொண்டதும் இல்லை. நாம் மனப்பூர்வமாகத் தமிழினத்தை நேசிக்கிறோம். தமிழினத்தை முன்னேற்ற விரும்புகின்றோம். தமிழினம் பிறிதோரினத்திற்கு அடிமைப் படலாகாது, என்பதில் அளவற்ற அக்கறை காட்டுகிறோம்.

இது நமது பிறப்பில் குறையாக அமைந்தது. இது தவறு என்றால், இந்தத் தவற்றைத் தொடர்ந்து செய்கின்ற பேறு நமக்குக் கிடைக்க வேண்டும்.

ஆனால் மறந்துங்கூட வேறு எந்த இனத்தின் மீதும் நாம் வெறுப்புக் கொண்டதில்லை. கொள்ளவும் மாட்டோம். இன்னும் தெளிவாகச் சொன்னால் குறுகிய இனவட்டத்திலிருப்பவர் பலர் இன்று இனப்பற்றில்லாதவர்கள் போல நடிக்கின்றனர். நாடும் அவர்களை நம்பத்தான் செய்கிறது. நாளேடுகள் அப்படித்தான் காட்டுகின்றன.