பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மொழி, இனம் இரண்டிற்கும் அடுத்து இன்றியமையாதது சமயம், பெரும்பாலும் இனவழி, மொழிவழி வந்தமைவது. நம்முடைய சமயத்தைப் பொறுத்தவரை இன்று இதே நிலைதான். நம்முடைய சமயமாகிய சைவ சித்தாந்தச் செந்நெறியில் நமக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. ஆனாலும், இந்து சமயத்தை நாம் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. அது போலவே நாம் கிறித்தவத்தைப் போற்றவோ, இசுலாமியத்தை ஏற்றிப் பாராட்டவோ என்றுமே தயங்கியதில்லை. ஆனாலும், நம்முடைய சமயம் சைவ சித்தாந்த செந்நெறியேயென்பதும், அது உலகப் பொதுநெறியாக வளர வேண்டும் என்பதும் நம்முடைய விழுமிய நோக்கம்.

இந்த நோக்கங்களை மையமாகக் கொண்டுதான் பயணம் நடைபெற்று வந்திருக்கிறது. நோக்கங்களுக் கிசைந்தவாறு நட்புகளும் உறவுகளும் அமைந்தன. அமையும். ஆனாலும் நம்முடைய சமுதாயம் காலத்தை வென்று விளங்க விரும்புவதில்லை. மொழி, இனம், சமயம் மூன்று துறையிலுமே இந்தக் குறையிருக்கிறது.

மொழித்துறை ஓரளவு விழிப்படைந்திருக்கிறது. ஆனாலும் காலத்தின் தேவைக்கும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் ஈடுகொடுப்பதாக இல்லை.

இனப்பற்று சென்ற காலத்திற்கு இப்போது பரவாயில்லை. அவ்வளவுதான். தமிழினம் இன்னமும் தம்முள் முரணி மோதிக் கொண்டிருக்கிறது. இனவழிப்பட்ட அன்பை வளர்த்துக் கொள்ளக் கொள்கைகள் கோட்பாடுகள் தடையாக இருக்கக் கூடாது. இது வேறு உலகம், அது வேறு உலகம். மண்ணிலிருந்து விண்ணுலகத்தை எண்ணிப் பார்ப்பார்கள். நட்பு உலகத்திற்கும் கொள்கை உலகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டைக் குறைக்கக் கூடாதா? அன்பின் வழி கொள்கை மாற்றங்களை உருவாக்க முடியும். கொள்கை வளரும். பகைவழி ஒரு பொழுதும் முடியாது.