பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்வதே மதங்களின் குறிக்கோள். ஆன்மநேய ஒருமைப்பாடே ஆன்மிகத்தின் இலட்சியம்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனாக, உயர்வற உயர்ந்து விளங்கும் தனக்குவமை இல்லாத பரம்பொருளுடன் ஆன்மா, ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்குரியனவே மதம், வழிபாடு என்பவையெல்லாம்! இந்த உறவு. பரம்பொருளை இடையறாது எண்ணுவதன்மூலமும் நினைந்து நெகிழ்ந்துருகுவதன் மூலமும்தான் கிடைக்க இயலும். இன்று மதங்கள், பரம்பொருளை வழிபடுதலுக்குரிய பயிற்சியைத் தருவதில்லை. மாறாகக் கடவுளையே கையூட்டுப்பெறும் நிலைமைக்குக் கீழ்ப்படுத்தி, தூப தீப ஆராதனை, அருச்சனையுடன் தொழும் சடங்கு வழிபாட்டு நிலையே எங்கும் வளர்ந்து வருகிறது; வளர்க்கப்படுகிறது. ஒரு கடவுள் வழிபாட்டு நெறியும் இல்லை. அன்பு, தியாகம், தன்னலமின்மை, பிறர்நலம் போற்றல் ஆகியன இன்று சமயத் துறையில் போதிக்கப் பெறவில்லை. வளர்க்கப் பெறவுமில்லை. இந்தப் போக்கு விரும்பத்தக்கதல்ல.

இன்று மதங்கள் பெரும்பாலும் மனித நேயத்தை, உயிர்க்குல ஒருமைப்பாட்டை ஒதுக்கி வைத்துவிட்டன. மனித உயிர்கள் நடமாடுங் கோயில்கள். இந்த மனித உயிர்களை ஆதரிப்பது முதற்கடமை, மதம் வற்புறுத்திய தலையாய கடமை. ‘எவ்வுயிர்க்கும் அன்பில்லார் ஈசனுக்கும் அன்பில்லார்’. ஆதலால், மனித நேயமும் மனித மேம்பாட்டுக்குரிய தொண்டுகளுமே இன்றைய அவசரக் கடமை! நம்முன் நிற்கும் மானுடம் நடமாடும் கோயில்! போற்றுவோம். வாரீர்!

அறிவியலும் ஆன்மிகமும்

வாழ்க்கையென்பது உடலும் உயிரும் சேர்ந்தது. வாழ்க்கையில் உடல் தேவைகளும் உண்டு; உயிர்த்-