பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆன்மாவின் தராதரத்தினை அறிந்துகொண்டு அதன் தரத்தை உயர்த்துவதற்குரிய முயற்சியுடைய வாழ்க்கைக்கு ஆன்மிக வாழ்க்கை என்று பெயர். ஆன்மா, இயற்கையில் குறைபாடுடையது; அறியாமைச் சார்புடையது; ஆனாலும் அறிவினைப் பெறும் தகுதியுடையது. குறையிலிருந்து நிறையை நோக்கிப் பயணம் செய்வதே வாழ்க்கை அறிவியலும் ஆன்மிகமும் உடம்பும் உயிரும் போல இணைந்து செயற்பட வேண்டியவை. ஒன்று, பிறிதொன்றுக்குத் துணை. ஒன்றின்றிப் பிறிதொன்றில்லை. அறிவியலும் ஆன்மிகமும் அல்லது அறிவியலும் அருளியலும் ஒரு நாணத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. ஆன்மிகச் சார்பில்லாத அறிவியல் நொண்டித் தனமானது. அறிவியற் சார்பில்லாத ஆன்மிகம் குருட்டுத்தனமானது. ஆன்மிகச் சார்பில்லாத அறிவியலால்தான் இன்று உலகத்தில் அணு ஆயுதப் போர்ப்பயம்! அருளியல் சார்பில்லாத அறிவியல், ஆக்கத்திற்குப் பதிலாக அழிவையே தரும். அறிவியல் சார்பில்லாத ஆன்மிகம், உலகியல் வாழ்வை வறட்சிக்கு ஆளாக்கி, நுகருமாறு நுகர்ந்து வாழ்வித்து வாழும் வாழ்வை இல்லாமல் பாழாக்கி விடும். வறுமையும் பிணியும் நிறைந்த வாழ்க்கையில் ஆன்மஞானம் இடம் பெறுவதில்லை. செழிப்பான மண்ணில்லாத நிலத்தின் எங்ஙனம் பயிர் வளர முடியும்? நீர்த்திவலைகள் செழித்த கருமேகம் இல்லாதபோது ஏது வான்மழை? அதுபோலவே வாழ்க்கையை நிறைவாக நடத்த இயலாதபோது ஆன்மா சிறப்படைவதில்லை. சாதாரண அறிவு கூட வறுமையாளர்க்கு இல்லை. அறிவுப் புலன்களுக்குரிய அறிவுவாயில்கள் எளிதில் கிடைப்பதில்லை. இதற்கே வாய்ப்பில்லையெனில் ஆன்மிகம் எப்படி வளரும் ? அதனால்தான்,

“நல்குர வென்னும் தொல்விடம் பிழைத்தும்”

என்று மாணிக்கவாசகரும்,