பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒருநிலைப் படுத்தப்பெற்ற மனம், ஆற்றலுடையதாக இருக்கும்.

வழிபாட்டில் ஒருமைநிலை என்பது பொறிகள். புலன்கள், மனம் அனைத்தும் ஒருமுனைப்படுத்தப் பெறுதலாகும்.

“ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்” என்றார் வள்ளலார்.

“ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை” என்று அப்பரடிகள் மொழிந்தார்.

வழிபாட்டில் ஒருமைநிலை தோன்ற ஒரு கடவுள் வழிபாடு தேவை. “ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” என்றார் பட்டினத்தார். ஒரு கடவுள் வழிபாட்டிலும்கூட, திருநாமம், திருக்கோலம் அனைத்தும் வழிபாடு தொடங்கிய நாள் தொட்டு ஒரே தன்மையுடையனவாய் இருத்தல் வேண்டும்.

“பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து” என்றார் காரைக்காலம்மையார். ஆக, பிறந்து மொழி பயின்ற காலந்தொட்டு ஒருருவம், ஒருநாமம் என்ற பழக்கம் ஒருமை நிலைப்பட்ட வழிபாட்டுக்குத் துணை செய்யும். பழக்கத்திற்கு வந்து வழக்கமாகிவிட்ட எந்த ஒன்றும் எளிதில் நினைவிற்கு வரும்; எந்தச் சூழ்நிலையிலும் நினைவிற்கு வரும். இந்த அடிப்படையில்தான்,

“வழுக்கி விழினும் நின்திருப் பெயரல்லால்
மற்று நான் அறியேன் மறுமாற்றம்”

என்றும்,

“நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே”

என்றும், அருள்நூல் பேசும்.