பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விளங்கின. இத்தகு கலை வளர வேண்டும். இசை முதலிய கலைகளின் வாயிலாகக் களிப்பில், மகிழ்ச்சியில் ஈடுபடுவது சமுதாயச் சீரமைப்புக்குத் துணை செய்யும். இதனால் மன விகாரங்கள் குறையும்; அளவான சிறு குடும்பங்களே இருக்கும்.

தலைவர் பெரியாரின் பிறந்த நாள் நினைவாகச் சிறந்த முறையில் சாதிகள் அற்ற-சமநிலைச் சமுதாயம் காண முயற்சி செய்ய வேண்டும். சமூகச் சீர்த்திருத்தம் என்பது தொடக்கநிலை; சமூக மேம்பாடு என்பது முடிவுநிலை. சமூக மேம்பாடு பொருளாதார ரீதியானதாகவும் -சமநிலை யுடையதாகவும் சமூகம் அமையும் பொழுதுதான் சமூக மேம்பாட்டுப்பணி நிறைவுபெறும்! இந்தத் திசையில் நாம் அனைவரும் - சிந்திக்க வேண்டும்! செயல்பட வேண்டும்! என்பதை அறிவோமாக! உணர்வோமாக! செயற்படுவோமாக!

17-9-88


கலைமகள் வழிபாடு

கலைநலம் பொருந்திய வாழ்க்கையே வாழ்க்கை. இயல், இசை, நாடகக் கலைநலம் செறிந்த வாழ்வே சிறப்புடையது. அப்படியானால் இயல், இசை, நாடகத்தில் எல்லாரும் பயிற்சிபெற்று நிகழ்த்த வேண்டுமா? அப்படியல்ல. இயல், இசை, நாடகத்தில் ஒவ்வொருவரும் பயிற்சி பெற்றிருந்தால் நல்லது மட்டுமல்ல, வரவேற்கக்கூடியதே! அவற்றை நிகழ்த்தும் பயிற்சி இல்லையாயினும் அனுபவிக்க ஒவ்வொரு வரும் கட்டாயம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

மானிட வாழ்க்கையில் கொடூரத்தன்மைகள் இல்லாமல் ஆக்கமும் அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பொருந்திய வாழ்க்கை அமையக் கலையை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கலைமகளை வழிபாடு செய்வதென்றால், கலைமகளைப் பூசிப்பது என்பது பொருல்ல. கலைகளைப் போற்றி வளர்த்துப் பேணுதல், கலைகளை அனுபவித்தல் ஆகியனவேயாகும்.