பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாட்டுக்குரிய பொருளாய் அமையத்தக்கவாறு வாழ்வாங்கு வாழ்தல்: கவிதை இயற்றும் திறன் பொருந்தி வாழ்தல்! இந்த உலகத்தினை யாதொரு சுவடும் இல்லாமல் அனுபவிக்க வேண்டுமானால், கவிதை உள்ளம் தேவை! பாட்டின் கவிதையின் பொருளாக விளங்குதல், பாட்டின் பயனாகிய இன்ப அனுபவச் செறிவுடன் கூடிய வாழ்க்கை வாழ்தல் இவையே நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டிய முறை அல்லது நாம் நாள்தோறும் செய்ய வேண்டிய கலை வழிபாடு!

நாள்தோறும் இசைப்பாடல்களை வீணை ஒலியுடன் கலந்து நின்று பாடுக! பாட்டைக் கேட்டுக் கலந்து அனுபவித்திடுக! நாள்தோறும் காலையில் வாழ்க்கை இசையுடன் தொடங்கட்டும்!

அடுத்து, நாள்தோறும் ஒருமணி நேரமாவது நல்ல புத்தகங்களைப் படித்து மகிழும் இனிய பழக்கம் தேவை. நமது வாழ்க்கை, உலகியல் காரணமாக வதைக்கப்படுதல் இயற்கை: இந்தச் சூழ்நிலையிலும் நாம் தேர்ந்தெடுக்கும் நல்ல இலக்கியம் நம்மை நிலைப்படுத்தும்; உறுதிநிலையை அளிக்கும்! ஆன்மாவின் - உயிரின் நோய் நன்னெறி சார்ந்த கருத்துகளாலேயே விலகும். “உயிர்க்கு மருந்து நூலகம்” என்பது அறிஞரின் அனுபவ வாக்கு படிக்கும் முயற்சியை விட, படிப்பதற்குரிய நல்லநூலத் தேர்ந்தெடுப்பதில்தான். வாழ்க்கையின் வெற்றி பொருந்தியிருக்கிறது. மானுட வாழ்க்கை சிறப்புற அமைவதற்கென்றே தோன்றிய திருக்குறள், சிறந்த வாழ்க்கை நூல் நாள்தோறும் திருக்குறள் கற்பது, திருக்குறள் தெளிவில் வாழ்க்கையைக் காண்பது என்பன கலைமகள் வழிபாட்டின் சிறந்த நடைமுறையாகும். இதுவே கலைமகள் வழிபாடு!

27.9.90