பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விசாரித்தும், கலந்தும் களித்துப் பேசுதலும் மகட்கோடல் முதலிய நிகழ்வுகள் பற்றிப் பேசுதலும் இன்றைக்கும் நடைபெறும் நிகழ்ச்சி. திருக்கோயிலில் ஒருமனப்பாட்டுடன் மக்கள் கூடுவர்; களித்தும் கலந்தும் பேசுவர். அதனால், திருக்கோயில் வளாகத்துக்குள் அன்பு செறிந்த, அருள்நலம் கனிந்த மனித உறவு வளர்கிறது; மனித நேயம் வளர்கிறது. சில சமயங்களில் அங்கேயே ஒரு கூட்டம் கூடுகிறது. கிராமத்தின் பொது நிகழ்வுகள் கலந்து பேசப்படுகின்றன; குடி மராமத்து, நாள் நிர்ணயித்தல், தண்ணீர் வரும் கால்கள் வெட்டுதல், நல்லேர் கட்ட நாளும் நாழிகையும் முடிவு செய்தல், விதை தெளிக்க நாள் முடிவு செய்தல், இன்னோரன்ன ஊரின் தேவைகளையும் ஆய்வு செய்து முடிவு எடுத்தல் நிகழ்கின்றன. இதனால், சமுதாயம் ஒழுங்கமைவு பெறுகிறது. ஓர் அருமையான கூட்டுவாழ்க்கை கால் கொள்கிறது.

ஒப்புரவு வாழ்க்கை

மானுடத்தின் மகோன்னத வெற்றிக்கு ஒப்புரவு நெறியைவிடச் சிறந்த வாழ்க்கை நெறி இல்லை. திருவள்ளுவர் விண்ணகத்திலும் மண்ணகத்திலும் ஒப்புரவு நெறியைவிட உயர்ந்த ஒன்றில்லை என்றார்.

“புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற”

என்பது திருக்குறள். திருக்கோயிலில் சிறந்த ஒப்புரவு நெறி வளர்ந்தது. திருக்கோயில், அமைப்பு முறையில் பற்பல பணிகளை அவாவி நிற்பது. அந்த ஒவ்வொரு பணியையும், அவ்வப்பணிக்குத் தகுதியுடையவர், உயர்வு தாழ்வு மனப் பான்மையின்றி, கடமையுணர்வோடு செய்து மகிழ்வது திருக்கோயில் பணிகளில் தான். திருக்கோயிலில் இறைவன் திருமுன்னர் திருவமுது படைக்கப்படுகின்றது. திருக்கோயி