பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இலக்காகிப் பரிதாபமாகக் கிடக்கின்றன. தரிசு நிலங்களைச் சீர்திருத்தம் செய்தல், உழுது வேளாண்மை செய்தல், மரம் நடுதல் ஆகியன திருமகள் வாழிபாட்டுச் செய்முறைகள். மானுடத்தின் நல்வாழ்வுக்கு மரங்கள் இன்றியமையாதன. ஒரு மனிதனின் வாழ்வு செப்பமுறக் குறைந்தது பத்து மரங்களாவது தேவை. ஆம்! நாம் “வீட்டுக்கு ஒருமரம்” என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம் ! இது போதாது. குறைந்தது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரமாவது நட வேண்டும்; ஆண்டுதோறும் நடவேண்டும். இது, திருவினைச் சேர்க்கும் திருமகள் வழிபாடாகும்.

ஒன்பான்வகைத் தானியங்களையும் உற்பத்தி செய்து மானுடம் உண்டுவாழ, மகிழ்ந்து வாழ உதவுதல் சிறந்த திருமகள் வழிபாடாகும். செல்வத்தை பொருளை ஈட்டுதல் எளிது. செலவு செய்தல் கடினம். அதனால்தான் பலர் செலவு செய்வதே இல்லை! இது அல்ல உண்மை! உழைத்தால் பொருளிட்டலாாம். ஆனால், தேவைக்கேற்ப நெறிமுறை அறிந்து செலவு செய்யும் நுட்பம் எல்லாரும் வாய்ப்பதில்லை. ஏன், இன்று நமது நாட்டில் எல்லா மட்டங்களிலும் திட்டமில்லாத, திட்டம் சாராத செலவு செய்பவர்கள் தாம் மிகுதி. ஒரு பகுதியினர் எதற்குமே செலவு செய்வதில்லை என்று உள்ளனர். இது விரும்பத்தக்கதல்ல.

“பொருட்செல்வம் போற்றாதார்க்கு இல்லை” என்பது திருக்குறள் பயனற்ற - தேவையற்ற செலவுகள், விளம்பரம் செய்து கொள்ளும் செலவுகள், ஆடம்பரச் செலவுகள், முதலீட்டுத் தன்மையில்லாத செலவுகள் ஆகியன தவிர்க்கத்தக்கன. “நுகருமாறு நுகர்தல்” வாழ்வாங்கு வாழ்தலாம். ஆக்கத்தின் பாற்பட்ட முதலீட்டுச் செலவுகள் மட்டுமே செய்யத்தக்கன.

நாம் ஏழைகள். வறுமைக் கோட்டிற்குக் கீழ் பலகோடி மக்கள் வாழ்கிறார்கள். ஏன் இந்த அவலம்? ஆனால், நமது