பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மலைமகள் என்பது காரணப் பெயர். மலை நிலையானது; உறுதியானது; வளம்பல தருவது; எல்லாமே மலைபடுவளம் ! படைப்பாற்றல் உடையனவெல்லாம் ஆற்றலுடையன, உமை சக்தி படைப்பாற்றல் உடையவள். ஆதலால், சக்தியை மலைமகள் என்று கருதுதல் சரியே! மலைமகள் வழிபாடு, சக்தி வாழிபாடு! சக்தி வழிபாடாவது நாம் ஒவ்வொருவரும் நமது சக்தியை, படைப்பாற்றலைப் பேணி வளர்த்துக் கொள்ளுதலாகும். நாளும் தாழாது வளர்ச்சியோடு பொருந்திய அரிய படைப்பாற்றல் மிக்க படைக்கும் தொழில் மேற்கொள்ளுதலே மலைமகள் வழிபாடு! “நாட்டுக்கு உழைத்தலே யோகம்” என்றான் பாரதி.

அளவற்ற சக்தியுடைய இந்த மானுட உடல், நாளும் ஆற்றல்மிக்குடையதாக வளர்க்கப்படுதல் வேண்டும். மானுடத்தின் ஆற்றலைச் சிதைக்கும் வறுமை, பிணி முதலியவற்றை எதிர்த்து நாள்தோறும் போராடுதல் மலைமகள் வழிபாடாகும். வறுமை என்பது நுகர் பொருள்கள் இல்லாமையாகும். நுகர்பொருள்கள் படைப்புப் பொருள்களேயாம்! உடல், அழியக் கூடாது! உடல் அழிந்தால் உயிர் அழியும் உயிர் அழியின் இந்த உலகத்தின் மானிடப் பேராற்றல் அழிவுறும்! எண்ணுக! "உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேன்” என்றார் திருமூலர். உடம்பை வளர்த்தலாவது உடம்பின் பயன்பாடு கொள்ளும் ஆற்றலை, உழைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதலாம்! ஆம்! அதுவே, பொருள்!

மானிடன் ஆற்றல் மிக்கவனாக, படைப்பாளியாக, வரலாற்றை இயக்குபவனாக வளர்தலும், வாழ்தலுமே மலைமகள் வழிபாடு: “எங்கெங்கும் சக்தி” என்றான் பாரதி! இந்த சக்தி வழிபாட்டின் முதிர்ச்சியே நவராத்திரி வழிபாடு!

நன்மை செய்யப்படுதல் வேண்டும். அப்போதுதான் தீமை அகலும், பின் நிகழ்ச்சியே அதாவது, தீமையை அடக்கி