பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

351


வெற்றிபெற்று வாழ்க்கையின் பேறுகளைப் படைத்தளிக்கும் விழாவே நவராத்திரி விழா! ஆனால், இன்றைய நவராத்திரி விழாவில் இந்தப் பொலிவு இல்லை! நமது வாழ்க்கை அடுக்கி வைக்கப் பெற்ற கொலுவைப் போன்றது! கொலு கலைவதற்கு முன்பே வாழ்க்கை வெற்றி பொருந்தியதாக அமைய வேண்டும். இதுவே, நவராத்திரி விழாவின் தத்துவம். மலைமகள் வழிபாடு வளர்ந்த முறை.

உலகை இயக்குவது சக்தி! ஆற்றல்! நாள்தோறும் நம் ஆற்றல்-உடலின் உழைப்பாற்றல், அறிவாற்றல், அன்பாற்றல், அருளாற்றல், படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளவேண்டும். இவ்வகை ஆற்றல்கள் பூசையால் வளர்வன அல்ல. உழைப்பால், பயன்படுத்தும் இயல்பால் வளர்வன. நாளும் கருவிகளைப் பயன்படுத்தினால் அவற்றின் பயன்படும் ஆற்றல் வளரும். இல்லையானால் கருவிகள் துருப்பிடித்து அழியும். உற்பத்தி ஆற்றலும் உற்பத்திக் கருவிகளும் பேணப்படுதலும் வளர்க்கப்படுதலுமே மலைமகள் வழிபாடு: “நான்” “எனது” என்ற அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுத்து உள்ளத்தில் அன்பினைத் தேக்கி ஆற்றல் மிக்க உழைப்பால் பொருள்கள் பல படைத்து, உலகத்தை உண்பித்து, உண்டு வாழ்தலே மலைமகள் வழிபாடு!

நாள்தோறும் ஊனில், உயிரில் ஆற்றலை ஓம்புக! வளர்த்திடுக! அறிவில், உணர்வில் ஆற்றலை வளர்த்திடுக! இதயத்தில் ஆற்றலைப் பெருக்கி வலிமை பெறுக! இதுவே மலைமகள் வழிபாடு!

29–9-90