பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





8
தமிழமுது

சமுதாயத் தொண்டே
சமயத் தொண்டு

மானுடத்தின் வரலாறு ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த ஓய்வில்லாத இயக்கத்திற்குரிய உயிர்ப்பு ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது? தனக்கென முயலாது பிறர்க்கென முயலும் பெற்றியே மானுடத்தின் இயக்கத்திற்கு உயிர்ப்பு; உந்து சக்தி. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து மானுடம் சிந்திக்கப் பழகி வந்திருக்கிறது; வாழும் துடிப்பினைப் பெற்றுப் படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறது; வாழ்வித்தும் வந்திருக்கிறது. பண்டைக் காலத்தில் அதாவது புராணங்கள் தோன்றிய பிறகு தேவர்கள் பாராட்டப்படவில்லை. மாறாக “வானவர்கள் வாழ்த்துவதும் தாம் வாழ்வான்” என்றும், “தக்கன் வேள்வித் தகர் தின்று” என்றும் “தேவரனையர் கயவர்’ என்றும் எள்ளி நகையாடப்பெற்றுள்ளனர். ஆனால் மானுடம் பாராட்டப் பெற்று வந்துள்ளது. ஏன்? இறைவன்கூட மானுடத்துடன் உறவு வைத்துக் கொள்ள இம்மண் புகுந்துள்ளான். ஏன்?