பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒன்று கனி. அதாவது பழம். அரும்பு போதாகி, மலராகிக் காயாகிக் கனியாதல் வளர்ச்சிமுறை. இந்தப் படிமுறை வளர்ச்சியில் முழுமை நிலை எய்த இயலாத நிலையில் அரும்பு நிலையிலேயே வீணாதல் உண்டு. அரும்பு நிலை கடந்த போது ஆன நிலையிலும் சிதைவு ஏற்படுகிறது. பொது நிலையினைக் கடந்து வளர்ந்த நிலையில்-மலர் நிலையில் பாழாதல் உண்டு. மலரிலிருந்து பிஞ்சு, பிஞ்சு நிலையில் காய்நிலை பெறாமல் உதிர்ந்து வீணாதல் உண்டு. காய்நிலையில் கனியாதற்கு இயலாமல் வெம்பி வீழ்தலும் உண்டு. இத்தனை ஆபத்துக்களைக் கடந்து பழமாதல் ஒரு பெரிய வளர்ச்சி, சாதனை, இதுபோலத்தான் மனிதனின் நிலையும். மனிதன் அவனுடைய குணங்களின் படிமுறையில் வளர்ந்த பிறகே பயன்படுகின்றவன் ஆகின்றான். குணம் என்னும் குன்றேற வேண்டும். இதுவே வாழ்க்கையின் சாதனை-பயன்? இந்தக் குணம் என்னும் குன்றேறி முடியாமல் பழுத்த மனத்தராகாமல் இடையிலேயே அழுக்காற்றில் ஆழ்ந்து கெட்டுப் போகிறவர்களும் உண்டு. அவா வெள்ளக்கடலில் வீழ்ந்து கரையேற முடியாமல் ஆழ்ந்து போகிறவர்களும் உண்டு. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லும் பாவையிடம் சிக்கி அழிந்து போனவர்கள் பலர். நாவடக்கம் இன்றிக் கடுஞ்சொல் கூறிக் குன்றியவர்களும் உண்டு. இந்த ஆபத்துக்களைக் கடந்து குணம் என்ற குன்று ஏறி நிற்பவனே மனிதன்! மாமனிதன்!

இயற்கையில் மனிதன் நல்லவனாகவே பலநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கிறாள். பண்டைக்கால மனிதன், அதாவது ஆதி மனிதன் தன் வாழ்க்கையோடு ஒத்து வாராத இயற்கையொடும் விலங்குகளொடும் தான் போராடினான். தன்னையொத்த மனிதர்களோடு போராடவில்லை. ஏதோ ஒர் இனக்கவர்ச்சிக்கு ஆட்பட்டுப் பகைமையின்றி வாழ்ந்திருக்கிறான். ஆனாலும் இன்றுள்ள அமைப்பியலில் உறவுகள் இருந்ததாகக் கூறமுடியாது. இன்றும்