பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது

361





சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயத்தின் உயிர்நாடியாக விளங்குவது ஒப்புரவு. விருந்தோம்பல் சிறந்த வேள்வியாகப் போற்றப்பெற்றது. இல்லையென்று சொல்லாது ஈதல், வாழ்வின் கடமை என்று கொண்டவர்களும் வாழ்ந்திருக் கிறார்கள். பெரியபுரணம் காட்டும் ஒப்புரவு நெறியில் மிகவுயர்ந்து பரவையார் மேற்கொண்ட நெறி. திருவருளால் மழையெனப் பொழிந்த நெல் மலையை எல்லாரும் அவரவர் தம் இல்லத்துக்கு எடுத்தேகுக’ என்று அறிவித்து அள்ளிக்கொள்ளச் செய்த ஒல்காப் புகழ்மிக்க ஒப்புரவுப் பண்பாட்டை என்னென்று வாழ்த்துவது!

தமிழர்களின் சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாய வாழ்வுக்குச் சங்க காலத்தில் அமைந்த ஒரு நிகழ்ச்சியைச் சான்றாக அமைக்கலாம். சங்ககாலச் சான்றோர் பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு வீட்டில் மனமுரசு கேட்பானேன். பிறிதொரு வீட்டில் சாப்பறை கேட்பானேன்? இம்மாறுபட்ட நிகழ்வு கொடுமையானது. இதற்குக் காரணமாய் அமைந்துள்ள அடிப்படையானது பண்பில்லாதது. அதனை மாற்ற வேண்டும் என்றார் பக்குடுக்கை நன்கணியார். மாற்றிக் காட்டினார் சுந்தரர்.

"...... எதிர் மனைகள்
இரண்டில், நிகழ் மங்கலவியங்கள்
அறையும் ஒலி ஒன்றில், ஒன்றில்
அழுகை ஒலி வந்து எழலும்
............ இரண்டும்
உடன் நிகழ்வது என்?”

என்பது சுந்தரர் வினா. ஒரு வீட்டில் துன்பம்; அடுத்த வீட்டில் இன்பம். ஒரு வீட்டில் வளம், ஒரு வீட்டில் வறுமை. திருக்கோயிலில் செல்வச் செழிப்பு: மக்களிடத்தில் வறுமை. இது மேன்மைகொள் சைவ நீதி ஆகுமா? பொதுமையில் ஆடுபவனை அடிப்படையாகக் கொண்டதே சைவ சமுதாய