பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது

367




சிந்தாந்த சமயம் பரசிவத்தாலேயே அருளிச் செய்யப்பெற்றது. ஆதலால் அது தமிழரது பேரறிவின் பயன் என்று கூறுதல் பொருந்தாது என்பர் சிலர். பரசிவமே தமிழ்நாட்டானாக- தமிழனாக-சைவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டது என்பதை,

“தண்ணார்தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்” .
“தென்னாடுடைய சிவன்”
“ஐயாறதனிற் சைவன்”

என்ற மணிமொழி மறைகளை நோக்கும்பொழுது, பர சிவத்தைத் தமிழனாக ஏற்றுக் கொள்வதில் என்ன குறை? இந்திய நாட்டில் வழங்கும் பல்வேறு சமயங்களுள்ளும் சைவ சித்தாந்தமே சிறப்புடையது. ஆயினும், இந்து சமயம் என்ற ஒரு பொதுப் பெயரும். ஒரு முடிச்சும் தோன்றிய பிறகு சித்தாந்த சமயத்தின் உண்மைச் சிறப்பினைப் பலரும் உணரமுடியாமல் போயிற்று. ஏன்? சித்தாந்த சமயத்தின் மெய்ம்மை விளக்கும் செந்தமிழ்ப் பண்ணைகளாக விளங்கிய திருக்கோயில்களிலும் திருமடங்களிலும்கூட அகப்புறச் சமயங்களின் செல்வாக்கும் சிறிதளவு புறச் சமயங்களின் செல்வாக்குங்கூடப் புகுந்து ஆட்சி செய்கின்றன. இச்செல்வாக்குப் புகுந்துள்ள நிலைமை, மரத்தில் புல்லுருவி போன்று இருப்பதால் தெற்றென விளங்கவில்லை. சித்தாந்த சைவம் மிகப் பழைய நெறி; தொன்மை நெறி என்று அருள் நூல்கள் பேசும். காலத்தால் பழமையாக இருந்தாலும் மிகப் புது நெறியாகவும் காட்சியளிக்கும் இயல்பு இச்சமயத்திற்கே உண்டு. “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என்று மணி மொழி. காட்டும் அவ்வியல்பு பெருமானுக்கு மட்டுமன்று; அப்பெருமான் திருவடியினை எளிதாகவும் இனிதாகவும் எய்துவிக்கும் இந்தப் பெருநெறிக்கும் பொருந்தும். இன்றைக்கும் அறிவியல் உணர்வுக்கு