பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயைந்ததாக, அனுபவத்திற்கு உகந்ததாக, நம்பிக்கைக்கும் நல்வாழ்வுக்கும் ஏற்றதாக இருக்கும் சமயம் இது என்று கூறினால் நடுநிலையாளர் யாரும் மறுக்கமுடியாது.

முடிவுரை

உலகியல் துறையிலும்கூட மார்க்சு மாமுனிவர் தத்துவக் கோட்பாடுகளுக்கு ஏற்ற விளக்கம் தரக்கூடிய சமயமாக இது விளங்குகிறது. தெளிவாகச் சொல்வதென்றால் இனிமேல் கேள்வி கேட்க முடியாத சமயமாக இது விளங்குகிறது. சிந்தனையின் உச்ச வரம்பில் நிற்கும் மெய்ந்நெறி இச்சிவநெறி. குமர குருபரசுவாமிகள்,

“ஒரும் வேதாந்தமென்னும் உச்சியிற் பழுத்த
ஆரா இன்ப அருங்கனி
சைவ சித்தாந்தத் தேனமுது”

என்று பாராட்டி உள்ளார்.


தமிழினத்தின் சமயப் பண்பு

தமிழினம் காலத்தால் மூத்த இனம்; கருத்தால் மூத்தது அவர்தம் மொழி. தத்துவத்தில் சிறந்து விளங்கும் இனிய மொழி. தமிழினத்தின், சமயநெறிப் பண்பு வழிவழிச் சிறந்து விளங்குவது. தமிழர்தம் சமயநெறி அறிவுக்கியைந்த நெறி; நம்பிக்கைக்கும் நல்வாழ்க்கைக்கும் ஏற்ற நெறி. தமிழும், தமிழியலும், சமயத் தத்துவமும் இணைந்தே வளர்ந்து வநதுளளன.

தமிழர்தம் தூய சமய நெறி, சைவசித்தாந்த சமயம் என்பது. இந்தச் சைவ நெறி மூன்று பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தத்துவ விளக்கம் செய்கிறது. திருக்குறள் சமயமும் இந்த அடிப்படையைக் கொண்டது. அம்மூன்று பொருள்களாவன, இறை, உயிர், தளை ஆகியவனவாம். இறை முழுமுதற் பொருள். தனக்குவமையில்லாதான்