பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது

366




என்றும், எண்குணத்தான் என்றும் திருக்குறள் போற்றிப் பரவும் பொருள். நன்றுடையான் என்று திருமுறை போற்றும். கடவுளால் உயிர் படைக்கப்பெற்ற பொருள் அல்ல. அஃது என்றும் உள்பொருள்; சார்ந்ததன் வண்ணமாக விளங்கக் கூடிய பொருள். தளை, உயிரை ஒட்டிய அழுக்கு. தளையின் ஆற்றலை அடக்கி, திருவருளின்ப வாழ்க்கையைப் பெறுதல் உயிரின் இலட்சியம். அந்த இலட்சிய சாதனைக்காகவே பிறப்பும் இந்த உலகியல் வாழ்க்கையும் கிடைத்தன.

உயிர், தளையின் ஆற்றலிலிருந்து விடுதலை பெற்றுத் திருவருளைச் சார்ந்து, இன்ப அன்பினில் திளைத்து மகிழும் முயற்சிக்குத் துணை செய்வது வழிபாடு, சிவநெறி சிவபெருமானையே வழிபடும் பொருளாகக் கொண்டது. அவன் பெருமை முன்னர் விளக்கப் பெற்றுள்ளது.

உயிரின் அறிவு, சிற்றறிவு. கண்டு - பழகிய பொருள்களையே அது நினைவுகூர முடியும்; உறவு கொள்ள முடியும். ஆதலால் உணர்வினாலன்றி காணப்பெறாத கடவுள், நம்மனோர் உய்யக் கண்ணிற்குத் தெரியும் திருமேனி கொண்டருளியுள்ளான். அத்திருமேனிகள் சில. அவற்றுள்ளும் சிவலிங்கத் திருமேனி விழுமிய சிறப்புடையது.

இந்த உலகியல் மூலமே உயிர்களை உய்யும் வகையில் இறைவன் ஆட்கொண்டிருள்கின்றான். கடவுள், உலகத்தின்வழிச் செயல்படுதலால் அவனையே உலகம் என்று கூறுதல் பொருந்தும். “எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்பது தேவாரம், உலகம் உருண்டை வடிவம் என்பது பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கண்ட முடிவு. உலகின் சின்னமாக லிங்கத் திருமேனி அமைந்து விளங்குகிறது.

இந்த உலகம் இருமையால் ஆனது இயங்குவது; விளங்குவது உயிர்களின் அறியாமை நீக்கத்திற்கும், ஞான விளக்கத்திற்கும் துணை நிற்பன பிறப்பின் வழி ஏற்கும் இன்ப துன்ப அனுபவங்களேயாம். ஆதலால் பிறப்பொடு தொடர்