பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




9


சிந்தனைச் சோலை

அன்பழைப்பு!

இருபத்தோராம் நூற்றாண்டு வரப்போகிறது. ஆனால் நாம் முன்னோக்கிப் பயணம் செய்து இருபத்தோராம் நூற்றாண்டை வரவேற்கப் போகிறோமா? அல்லது பின்னோக்கி வரலாற்றுக்கும் முந்திய-நாகரிக முதிர்ச்சியில்லாத பழைய யுகத்திற்குச் செல்லப் போகிறோமா? அன்புகூர்ந்து சிந்தனை செய்யுங்கள்!

இற்றைநாள் போல அற்றைநாளில் அறிவியல் உலகம் வளரவில்லை. அதன் காரணமாகக் காலமும் தூரமும் மக்களைப் பிரித்து வைத்திருந்தது. உடனுக்கு உடன், மானுடத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, வளர இயலவில்லை. அதனாலேயே, மானுடம் பேசும் மொழிகள், பலவாயின; மானுடம் நின்றொழுகும் சமயங்கள், பலவாயின. பின், மொழி, சமயம் இவைகளுக்கு ஏற்ப நாடுகள் பல ஆயின. வளர்ந்துவரும் அறிவியல் இன்றைய பூத, பெளதீக உலகத்தை நெருக்கமாகக் கொண்டு வந்துவிட்டது. மானுடத்தின் இதயங்கள் இணைக்கப் பெறவில்லை; ஆன்மநேய ஒருமைப்பாடு கால் கொள்ளவில்லை. ஏன், இந்த அவலம்?