பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அறிவியலால், பூத, பெளதீக உலகம் இணைக்கப் படுவதற்கு முற்பட்ட மானுட நெறியாளர்கள்-சமயச் சிந்தனையாளர்கள் “ஓருலகம்” பற்றிச் சிந்தித்தனர். மனிதகுல ஒருமைப்பாட்டை ஒழுக்கமாக்கினர். வேறுபாடுகளுக்கிடையில், விழுமிய ஒருமைப்பாடு காணக் கற்றுத் தந்தனர். திருக்குறள் உலகந்தழிஇய ஒழுக்கத்துடன் வாழ்தலை வாழ்க்கையென்று ஆற்றுப்படுத்துகிறது.

மாணிக்கவாசகர்,

:“எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!” என்றார்.

“வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா”

என்றார் தாயுமானார்.

வள்ளலார்,

“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய்”

என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டை எடுத்தோதினார்.

விவேகானந்தர், “இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும்; அதனுடைய இதயங்கள் ஒரே ஆன்மீக ராகத்தில் இசைக்கவேண்டும்” என்று கூறினார்.

அண்ணல் காந்தியடிகள், “உலகத்தில் உள்ள சிறந்த எல்லாச் சமயங்களும் உண்மையானவை என்பதில் நான் நம்பிக்கையுள்ளவன். நமது சொந்த சமயத்தைப்போல் மற்ற சமயங்களையும் மதித்து, கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அது மாத்திரமல்ல மற்ற சமயங்களுக்கும் மரியாதை காட்டவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.