பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் சோலை

379


“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக”

என்றார். பிறப்பின் சார்பாலும் சுற்றுச் சூழ்நிலையாலும் மனிதனின் ஆன்மாவில் குற்றங்கள் இருக்கலாம்; இருக்கவும் கூடும்! அக் குற்றங்கள் நீங்குதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும் என்பதை உணர்த்த, “கசடறக் கற்பவை கற்க” என்றார். கற்பது என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெற வேண்டிய ஒரு பணி! மனிதர் ஒவ்வொருவரும் உலகில் உள்ள அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்தல் என்பது எளிதன்று; அது இயலாத ஒன்று. ஆதலால், கற்றார் வாய்க் கேட்டல் அறிவு பெறுதலுக்குரிய எளிய வழி! கற்றலிலும் கேட்டலிலும்கூட அவற்றை ஆய்வு செய்து பெறாது போனால் அறிவு தலைப்படாது. “சிந்தையும் தெளிவுமாகி, தெளிவினுள் சிவமுமாகி” என்று திருமுறை கூறும் அறிவின் தெளிவுதான் உறுதிப்பாட்டினைத் தரும்.

துன்பங்களின் வகை

அறிவு எது? அறிவு ஆற்றல் வாய்ந்த கருவி. காலந்தோறும் மாறி வளர்ந்து வரும் சிறந்த கருவி!

“அறிவு அற்றம் காக்கும் கருவி”

என்றது திருக்குறள். துன்பத்தினின்று மனிதனைப் பாதுகாப்பது அறிவு. ஆம்! எத்தனை எத்தனைத் துன்பங்கள். புதரிடை மலர் போலத் துன்பங்களுக் கிடையில்தானே இன்ப வைப்பு இருக்கிறது. துன்பம் உலகு சார்ந்த துன்பம், சமூகம் சார்ந்த துன்பம், உடல் சார்ந்த துன்பம் என்று பலபடக் கூறலாம்.

ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, வளி, வான் ஆகியவற்றால் ஏற்படும் துன்பம் உலகைச் சார்ந்த துன்பம். இன்று இந்த வகைத் துன்பம் பெரும்பாலும் குறைந்து விட்டது. இடி, மின்னல், மழை வெள்ளம் இவற்றினால் துன்பம் நிகழ்வதற்கு