பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முன்பே கண்டறிந்து அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் மனிதன் வெற்றி பெற்றுவிட்டான். ஆதலால், உலகத்தினால் வரும் துன்பம் இன்று மிகுதியும் இல்லை.

அடுத்து, சமூகத்தால் வரும் துன்பம். சமூகம் என்பது மனிதக் கூட்டமைப்பு ஏற்பட்டதன் நோக்கம் மனிதனின் ஆற்றலைப் பெருக்கி, ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தலுக்குரிய நியதியினை மையமாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில்-தனிச் சொத்துடைமைச் சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்து மானுடச்சாதிமனிதம், மனித நேயம், மனிதகுல உறவு ஆகிய பண்பாடுகளை இழந்து, கொடிய விலங்குகளைவிட மோசமான இழி நிலைக்கு இறங்கி விட்டது. இன்றைய நிலையில் மனித ஜாதி ஒரு கூட்டம் தான்! அதுவும் தன்னிச்சைப்படி நடக்கும் வெறிபிடித்த கூட்டம்! நாளும் கொலைக் கருவிகளைச் செய்து குவிக்கும் மனிதக் கூட்டம்! அதுமட்டுமா? இன்றைய சமூகம் மனிதனைத் தாங்குவதற்குப் பதிலாக அவன் தோள்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு சவாரி செய்கிறது. அந்தோ! என்ன கொடுமை! இந்த உலகத்தில் உள்ள நுகர்வுப் பொருள்கள் இந்த உலகத்திற்கு மட்டுமல்ல, இன்னும் பல உலகத்திற்கு போதும் ! ஆயினும், தனி மனிதனுடைய கொள்ளிவாய்ப் பிசாசுத் தன்மையுடைய பேராசையால் ஈடு செய்ய முடியாமல் போகிறது. இத்தகைய சமூக அமைப்பினைத் திருத்திப் பயனுடையதாக்குவதும் மனிதவள மேம்பாட்டினைக் காக்கும் பணியாகும்.

துன்பத்தை மாற்றும் முயற்சி

வாழ்க்கையைப் பயனுடையதாக்கிட அறிவறிந்த ஆள்வினை தேவை. மானுடத்தினிடம் ஒப்படைப்புச் செய்யப்பெற்றுள்ள ஆற்றல். அம்மம்ம! அளப்பரிய ஆற்றல். மானுடத்தின் ஆற்றலை இந்தப் புவிக்கோள் பறைசாற்றுகிறது.