பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் சோலை

383


வளத்தைக் காண்பதில் அரசுகள் கவனம் செலுத்தவேண்டும், பல்கலைக் கழகங்களின் பணியமைய வேண்டும். திருமடங்களில் திருக்கோயில்களின் திருத்தொண்டு அமையவேண்டும்.

மனிதவள மேம்பாட்டுக் கருத்தரங்கு குன்றக்குடி, 28-8–91
உண்மையான சமயம்!

இந்திய வரலாற்றில் தத்துவ விசாரணை என்பது மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே வரும் ஓர் அறிவியல் பயிற்சி! தத்துவ சோதனை, தத்துவமசி என்ற வழக்குகள் இந்திய நாட்டின் வரலாற்றொடு இணைந்தவை. ‘தத்துவம்’ என்றால் உள்பொருள் எனப்படும். உள்பொருள்களை, அவற்றின் உள்ளீட்டை, பரிணாமத்தை, பயன்பாட்டை உய்த்தறிந்து உணர்தல்தான் தத்துவ சோதனை. தமிழ்நாடு தத்துவத் துறையில் மெய்ப்பொருளறிவில் சிறந்திருந்தது. இந்திய மெய்ப்பொருள் நெறிகளிலெல்லாம் தமிழகத்தின் சித்தாந்த நெறி விழுமியது. ஐயங்களினின்று நீங்கியது; நம்பிக்கைக்குரியது; வாழ்க்கைக்கு இசைந்தது.

தமிழொடு பிறந்து வளர்ந்த நெறி சித்தாந்த நெறி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மெய்கண்டார் இந்தச் சித்தாந்தச் சிவநெறி, மற்ற நெறிகளினும் எவ்வாறு விழுமியது என்று அளவைகளால் நிலை நிறுத்தினார். ஆதலால் மெய்கண்டார் சைவ சித்தாந்தச் செந்நெறியைக் கண்டவர் அல்லர். மெய்கண்டார் சைவ சித்தாந்தத்தைச் சிவஞான போதம் என்ற நூல் வழி கட்டமைப்புச் செய்தார்.

ஏனைய சமயங்களுக்கும் சைவத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு சைவத்தில் எளிதில் ஊடுருவல் செய்ய இயலாது என்பதுதான். சிந்தையில் தெளிந்த ஞானிகளால் காணப் பெற்றது சித்தாந்த சைவம், மூன்று பொருள்கள், என்றும் உள்ளவை. இந்த மூன்றாவன: இறை, உயிர், தளை என்பன. இந்த மூன்றனுள், இறையை, இந்தியச் சமயங்கள் பலவும்