பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உலகச் சமயங்களும் ஏற்றுக் கொள்ளும். ஆனால் சித்தாந்தம் இறையின் இருப்பு, தொழில்-முதலியவற்றை ஐயத்திற்கிடமின்றி விளக்குகிறது. இறை-கடவுள் ஒன்றே ஒன்றுதான். கடவுள் ஒருவரே. அவருக்கு உருவமில்லை. உருவம் இல்லாமலும் இல்லை. அவருக்கு ஊர், பெயர் கிடையாது. அதே போழ்து ஊர், பெயர் இல்லாமலும் இல்லை. இயல்பாகக் கடவுளுக்கு உருவம் இல்லை. ஆட்கொண்டருள் செய்தலுக்காகக் கடவுள் அருவுருவ, உருவத் திருமேனிகளை எடுக்கின்றான். கடவுள் வரம்பிலா ஆற்றல் உடையவன். ஆதலால், அவனால் எந்த உருவத்தையும் தன்னுடைய இயல்பாகிய பூரணத்துவத்திற்கு யாதொரு குறையும் வராமல் எடுக்க இயலும், கடவுள் மனம், வாக்குகளைக் கடந்தவர். ஆயினும், ஆன்மாக்களின் நலம் கருதி ஆன்மாக்கள் நடத்தும் வாழ்க்கையில் வழிநடைத் துணையாகப் பருவங்களில் பருவங்களுக்கிசைந்த பாத்திரப் பண்பில் நின்றருள் செய்யும் தனித்துணையாம் தன்மையை,

அப்பன்நீ அம்மைநீ அன்புடைய மாமனும் மாமியும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒருகுலமும்
சுற்றமும் ஒருரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய்
என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்து நீ! இறைவன் நீ
ஏறுரர்ந்த செல்வன் நீயே”

என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளமையால் அறிக.

முப்பொருள்களுள் அடுத்து இருப்பது ஆன்மா-உயிர். இந்தியத் தத்துவ ஞானங்களில் எல்லாம் சித்தாந்தச் செந்நெறியின் ஆன்மாக் கொள்கை தெளிவானது. ஆன்மாக்கள் பல; பலப்பல ஆன்மாக்கள் படைக்கப்பட்டன அல்ல. ஆன்மாக்களுக்கு, உயிர்களுக்கு தோற்றமும் இல்லை; அறிவும் இல்லை. ஆன்மாக்கள் கடவுளைப் போலவே என்றும் உள்ளவை.