பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




10


முத்து மொழிகள்


தாய்மொழியில் வழிபாடு


இந்த உலகிலே எதையும் இழக்கலாம்-மறக்கலாம். ஆனால் தாய்மொழியை இழக்க இயலாது; மறக்க முடியாது. தன் சொந்த மொழியை இழந்து மறந்து பிறமொழிப் பற்றுக் கொண்டு வாழ்தல் பொய்க்காலில் நடப்பதற்குச் சமமாகும். எந்த இனமும் தத்தம் மொழியைப் பேச-பேண முன்வருவது போலவே தமிழர்களாகிய நாமும் முன்வர வேண்டும். தமிழ் உணர்வு கொண்டு, தமிழ்ச் சிந்தனையால் தமிழ் நாகரிகம் காக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும், எல்லாக் கட்டத்திலும் தமிழ் வாழ்வு வாழ விருப்பங்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வழி நல்லோர்களாய், தண்டமிழ்ச் சிறார்களாய்ச் சிறக்க முடியும்.

தமிழையே பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு வாழ்ந்ததனாலேதான் அன்றையத் தமிழன் தகைமை சான்ற தன்னிகளில்லாத வாழ்வு வாழ முடிந்தது. தமிழ், வாழவும் வாழ வைக்கவும் போதிக்கும் ஒரு செம்மொழி. உறவாடி மகிழவே மொழி உதவுகிறது. உணர்ச்சிகளை வாயாலே காட்டுவதுடன் கண்ணாலும் முகத்தாலும் காட்டிவிடலாம்.