பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


லில் மிக மிகக் கவனமாய் இருப்பது அவசியம். களைகளைக் களைந்து, யானை போன்ற மிருகங்களிடமிருந்து காத்துநாற்று நட்டால் தான் நெற்பயிர் வளர்ந்து வீட்டுக்கு வந்து, பசியைப் போக்கும். அகப்பரப்பில் ஆன்மீகப் பயிரை அருள் நீரால் வளர்த்து, ஐம்புல வேடர்களின் முற்றுகைகளிலிருந்தும் காத்து, ஆன்ம நேயர்களாக வேண்டும்.

மூளை விரிவதைவிட இதயம் விரிய வேண்டும். இதய விரிவு “இன்பமே துன்பமில்லை” என எண்ணி ஆன்மீகப் பயிர் வளர்க்க உதவும். இன்பத்தைக் குறைவிலாது அள்ளித் தரும் இறைவன் நமது அழுக்குகளை வாங்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறான். ஆண்டவனது பிச்சாடன மூர்த்திக் கோலம் நிகரில்லா உண்மையை வெளிப்படுத்துகிறது. ஆன்மாக்களின் நன்மைக்கும், நல்வாழ்வுக்கும் இடையூறாயிருக்கும் எல்லாவற்றையும் பிச்சை கேட்பதைப் போல் கெஞ்சிக் கேட்டுப் பெறுகிறான். அவனது கெஞ்சும் நிலையைப் பெற அவன் திருவடிகளில் ஆழக்குளிக்க வேண்டும். நீராடல் உடல் நலம் தருவது போலவே திருவடிக் குளிப்பு ஆன்மநலம் நல்கும். ஆன்ம நேயத்திற்கு அன்பே அடிப்படை அன்பில்லாமல் ஆன்மீகப் பயிர் வளராது. என்னதான் படாத பாடுபட்டாலும் அகப்பரப்பிலே அன்பு விதையைத் தூவாவிடில் என்ன பயன்? கடவுள் நம்பிக்கை என்ற விதை அன்பை உருவாக்க உதவுகிறது. அன்பு விதை அருள் என்னும் குழந்தையை ஈன்று புரந்தருகிறது. அறம் இன்பத்தைத் தருகிறது.

பலனைப்பெற அதற்கு மூலகாரணமானது எதுவோ அது பயன்படுத்தப்பட வேண்டும். ஓர் ஊரிலே இரு சகோதரர்கள் இருந்தார்கள்; இருவரும் விவசாயிகள். ஒருவன் விவசாயத் துறையிலே பாடுபட்டுப் பயனடைந்தான். மற்றவனோ பாடுபட்டான்; ஆனால் பலனைப் பெறவில்லை. பயன் கிட்டாததால் ஒருவித வெறுப்பு அவனிடத்தே அரும்பியது. வாழ்வில் வெறுப்புக் கொண்டவன்போல்