பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருள்

415



ஞானச் செல்வர் குருநானக்

இன்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் பாஞ்சாலத்தில் ஒரு சமயப் புரட்சி தோன்றியது. ஞானப் பெருந்தகை குருநானக் தோன்றிய காலம். வட இந்தியாவில் இந்து, முஸ்லீம் புகைச்சல்கள் இருந்த காலம். இந்து சமயத்தில் சாதிவெறியும் புரோகிதர்களின் ஆதீக்கமும் பொருளற்ற சடங்குகளும் ஆதிக்கம் செய்த காலம். இந்தக் காலக் கட்டத்தில் இந்திய சமூகத்தைப் பிடித்திருந்த நோயை அகற்றத் தக்க மருத்துவராக ஞானப் பெருந்தகை குருநானக் தோன்றினார். ஞானக்கதிரவன் குருநானக் பிறப்பில் இந்து. அவர் பிறந்த குலம் கூடித்திரியகுலம். அவர் இந்து-முஸ்லீம் சமயங்களை இணைத்து ஒரு புதிய மதத்தையே உருவாக்கினார். குருநானக் அவர்கள் உபதேசம் ஒருவன் இந்துவுமல்லன், முஸ்லிமும் அல்லன் என்பது மக்களைச் சமய அடிப்படையில் இந்து என்றும் முஸ்லீம் என்றும் பிரிப்பது தவறு; மக்கள் தாமே என்பது உபதேசத்தின் விழுமிய பொருள்.

குருநானக்கின் சீக்கிய சமயம் மக்களை மக்களுக்குத் தொண்டு செய்வதை மையமாகக் கொண்டது. சீக்கியசமயம் சகோதர்த்துவத்தையும் வற்புறுத்தியது; வற்புறுத்துகிறது. சீக்கிய சமயக் குருத்துவாரங்கள் சமத்துவம், அன்பு, தோழமை என்பனவற்றை நடைமுறைப்படுத்தும் அறப்பணி மனைகளாக இன்றும் விளங்குகின்றன.

ஞானப் பெருந்தகை குருநானக் இந்து இஸ்லாமிய மதங்களை ஆராய்ந்து இவ்விரண்டு மதங்களிலிருந்த நலன் தரும் கொள்கைகளை, கோட்பாடுகளை இணைத்தார். சீக்கிய சமயத்திற்கு மறுபிறப்புண்மை. மாயைக் கொள்கை உண்டு. இவை இந்துமதக் கொள்கை. ஒரே கடவுள். உருவம் அற்றவர் என்பது முக்கிய மதக் கொள்கை. இந்தக் கொள்கைகள் இஸ்லாமிய மதத்திலிருந்து எடுத்துக் கொண்டவை