பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யாகும். “ஹிந்து சமயமும் இஸ்லாம் மதமும் மணந்தன” என்று சீக்கிய எழுத்தாளர்கள் இதனைப் புகழ்ந்தனர். எந்த ஒரு சூழ்நிலையிலும் குருநானக் அறிவுக்கு ஒவ்வாத கொள்கைகளை, கோட்பாடுகளை எடுத்துக் கொள்வதில்லை. சீக்கிய மத சித்தாந்தப்படி இறைவன் எங்கும் நிறைந்தவன். இஸ்லாம் மதத்தின் சமத்துவக் கொள்கைகளை அப்படியே குருநானக் ஏற்றுப் போற்றினார். குருத்துவாராவில் வழிபாடு செய்யும் பொழுதும் சரி குருத்துவாராவில் உண்ணும் பொழுது சரி, பணம், பதவி என்ற ஏற்றத்தாழ்வின்றிச் சமநிலையில் அவரவர் வந்த வரிசைப்படிதான் வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும்; உணவருந்த வேண்டும் என்ற நடைமுறையை குருத்துவார் நடையாக்கினார். ‘சத்சங்’ என்ற இந்த நடைமுறை இஸ்லாத்தைச் சார்ந்தது.

மதங்கள் காலத்திற்குக் காலம் பல்வேறு மதங்களின் ஏற்புடைய கொள்கைகளை ஏற்று வலிமையும் புதுமையும் பொறுமையும் பெற்று வளர்த்தால் பல மதங்கள் தோன்று வதைத் தவிர்த்து விடலாம். மதங்களுக்கிடையில் சண்டைகள் தோன்றுவதையும் தவிர்க்க இயலும். தொன்மைக் காலத்தில் மதங்கள் நெகிழ்ந்து கொடுத்தன. காலப்போக்கில்தான் பழக்கங்களால் கெட்டி தட்டிப் போன மதபீடங்கள் நெகிழ்ந்து கொடுக்க மறுத்தன.

குருநானக் புதிய மதத்தை உருவாக்க விரும்பினார். ஏன்? இரண்டை ஒன்றாக்க நினைத்தார். இந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் இணைத்து ஒரே மதமாக்க முயன்றார். இணைப்பிற்கு உரிய இரண்டு மதங்களிலும் அற்புதமான வாழ்வியற் கொள்கைகள் இருந்தன. குருநானக் வெற்றியும் பெற்றார்! இந்து-இஸ்லாமிய இணைப்பாகச் சீக்கியமதம் தோன்றியது. அனுபூதிச் செல்வர் குருநானக் வெற்றி பெற்றார். இந்து, முஸ்லீம் மக்கள் இணைந்தனர். சக்கரவர்த்தி அக்பர் ஏற்றார். ஏன், இன்றும் ஞானச் செல்வர் குருநானக் வழியில் இந்திய மக்கள் நடைபயிலக் கூடாது?