பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயிர்ப்பு இறை. இந்த இணைப்புக்கு அன்பே காரணம். இங்ஙனம் நெஞ்சத்தை இறைவன் தாளிணைகளுக்குத் தந்து வாழும் வாழ்க்கையே வாழ்க்கையென்றார் அப்பரடிகள். இறைவனை நமக்குப் பெற்றுத் தர வல்லது-நம்மிடத்தில் இருத்தி வைக்க வல்லது-அன்பேயாகும். மாணிக்கவாசகர் இந்த அன்பினை ஆற்றல்மிக்க அன்பு என்று கூறுவார்.

அப்பரடிகள் “ஐயன் ஐயாறனார்க்கு அன்பலால் பொருளில்லை” என்றார். அது போலவே, தொண்டு செய்தலே உயிர்க்கு ஊதியம் என்றார். அப்பரடிகள் காட்டிய இறைவனை விட்டுப் பிரியாத நெஞ்சும் அவர் காட்டிய அன்பும், அவர் காட்டிய தொண்டும், நம்மைச் சேருமாயின் அவலம் வந்து அடையாது. ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பு கிடைக்கும். இம்மையோடன்றி, மறுமையும் ஏமாப்புடன் வாழலாம்.

குறையும் நிறையும்

இறைவன் எங்குள்ளான்! இஃது ஒரு பழைய வினா. மறைகள், இறைவனை இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றன. கடவுளை நாடும் நெறியில் பத்திமை பூண்டொழுகு கின்றவர்கள் இறைவனை ஓயாது தேடிக்கொண்டிருக்கின்றனர். தீர்த்தங்களில் மூழ்கித் தேடுகின்றனர். பூசனையில் புகுந்து தேடுகின்றனர். பக்தர்கள்தான் இப்படித் தேடுகின்றார்கள் என்றால் நாத்திகர்களும் தேடிக்கொண்டிருக் கின்றனர். ஆனால் இறைவன் அகப்படவில்லை. இருக்கின்ற இடத்தில் தேடினால்தானே அகப்படுவான். அப்படியானால் எங்கு இறைவனை எளிதிற் காணலாம்?

மனிதன், குறையுடையவன். ஆனால், நிறையை அடைய வேண்டியவன். குறை, அவனது மாற்ற முடியாத இயல்பன்று. குறை, நிறையாக மாறி வளரத்தான் வாழ்க்கை நிறை என்பது அற்புதமான சொல். நிறை உணர்த்தும் பண்பு