பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்கைகள் தோன்றின. இவைகளில் உள்ள உயர்வு நவிற்சிகளைப் பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டியதில்லை.

சமய நெறியின் தோற்றத்திற்கு அடிப்படை, பயம் என்பது மேற்றிசை நாட்டுக் கொள்கை. தமிழ்க் கொள்கை அஃதன்று. தன்னினும் மிஞ்சிய அறிவை, ஆற்றலை அவாவும் நெறியிலேயே சமய நெறி தோன்றிற்று என்பது தமிழ்க் கொள்கை.

மேலை நாட்டில் விஞ்ஞானம் வளர்கிறது. நமது நாட்டில் விஞ்ஞானம் வளரவில்லையே என்றும் இங்கு விஞ்ஞானம் வளராததற்குக் காரணம் சமய நம்பிக்கைதான் என்றும் சிலர் கூறுகின்றனர். இது வரலாற்று உண்மைக்கு மாறானது. கடவுள் நம்பிக்கையில்லாத உலகாயதம் நெடிய நாட்களாகவே இந்நாட்டில் இருந்து வந்துள்ளது. உலகாயதம் என்ற ஒரு கொள்கையையே மதம் என்ற பட்டியலில் சேர்த்தவர்கள் நம்மவர்கள்தாம்.

கடந்த அரை நூற்றாண்டாக மத நம்பிக்கையில்லாத -மத நம்பிக்கையை எதிர்த்து இயக்கங்கள் மேலோங்கி வளர்ந்தன நமது நாட்டில், ஆனால், இந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களும்கூட சமய எதிர்ப்பு இயக்கம் நடத்தியவர்களே தவிர, விஞ்ஞான வளர்ச்சியில் ஈடுபடவில்லை. விஞ்ஞான வளர்ச்சியில் ஈடுபடக்கூடிய அளவுக்கு, அவர்களுக்கு நாட்டமும் இல்லை. ஒன்றை எதிர்ப்பதனாலேயே இன்னொன்று வளர்ந்துவிடாது என்ற உலக நியதியின் உண்மை அறிய தக்கது. அறிவியல், அருளியல் என்பன இரட்டைக் குழந்தைகள், ஒன்றோடொன்று முரண்பட்டது என்று கூறுவது எந்த ஒன்றும் ஆராய்ந்து அறியாதவர்கள்.

“பித்தா! பிறைசூடி!” என்ற பாடலைச் சிலர் கேலி செய்கின்றனர். கேலி செய்வதற்குப் பதில் அதிலுள்ள விஞ்ஞான உண்மைகளை விரிவாக்க நினைத்திருந்தால் நாமும் விஞ்ஞானிகளாகியிருக்கலாம். “பிறைசூடி” என்பதனாலேயே பிறை-நிலா கடவுள் அல்ல என்பதும் அதனை அடைந்து அனுபவிக்கலாம் என்பதும் பெறப்படவில்லையா? இக்கருத்து வழி அடுத்த தலைமுறையின்