பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாறு பயன்படுத்தினால்! அதில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது?

மதம் அல்லது சமயம் உலகத்தில் மனிதனுடைய இடத்தை நிர்ணயிக்கிறது, உறவுகளின் விளைவை உணர்த்திக் காட்டுகிறது வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெற்று இன்புற்று வாழ வழி நடத்துகிறது. உலகம் கடவுள் விருப்பின் வழியது. கடவுள் விரும்புவது உலகத்தின் இன்ப விருப்பின் வழியது. கடவுள் விரும்புவது உலகத்தின் இன்ப வைப்பு. நீ அந்த உலகத்தின் உறுப்பினன். ஆதலால், உலகம் உயரப் பணியாற்று! கடவுள் விரும்பும் அனைத்துயிர் இன்பத் திற்கும் தொண்டு செய்! என்றெல்லாம் சமயம் கற்பித்து வழி நடத்துகிறது.

சைவத்தின் உயிரியற் கொள்கையும், பெளத்தத்தின் இரக்க உணர்ச்சியும், சமணத்தின் புலனடக்கமும், கிறித்த வத்தின் தொண்டும், இசுலாமியத்தின் கடவுள் நம்பிக்கையும் ஒருங்கிணையுமானால், புதிய விதி செய்ய முடியாதா? செய்ய முடியும். ஆதலால், வரலாறுகளில் நிகழ்ந்த தவறுகளை மறப்போம்! சமய அனுபவங்களின் வழி வளர்ந்துள்ள விரிவார்த்த அனுபவங்களை ஏற்போம்! மதிப்போம்! முழு உலகத்திற்கு எதிரிகளாக இருக்கிற முனைப்புகளை மழுக்கி ஒருமையுணர்வை வளர்த்து இந்த உலகம் இன்புற்று வாழ, வளரப் பொதுமையான-வள்ளளார் வழியில் சமயங்கடந்த பொது நெறி கொண்டோ, புதியவிதி சமைப்போம்!

புதிய தளிர்களைப் பெற்றுக் குலுங்கும் மரத்தின் அடிவேர் பழமையானதுதான்! புதிய தளிர்களைப் பெறாத மரம் பழமையல்ல; பட்டுப்போனது. சமய நெறிகள் பட்டுப்போனவை அல்ல; உயிர்ப்புள்ளவை; புதிய தளிர்களைத் தாங்கும் இயல்பின! ‘முள்ளைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய்’ என்ற மாணிக்கவாசகரின் பாடல்வழி பொதுவிதி சமைத்து மனித மனவளர்ச்சிக்கு சமயத்தை உரியதாக்குவோம்.