பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாட்சியை விளக்கப் பெரிதும் தொண்டாற்றியுள்ளனர். அவர்கள் கருத்தில் வடபுலத்திலிருந்து வந்த பெளத்தமும் சமணமும், தமக்கென நாடும் மொழியும் இறையும் இல்லாத-சுழன்று திரிந்த மாயாவாதமும் பெண்ணினத்தை இழிவுபடுத்தின. மனையறத்தைச் சிற்றின்பம் என்றும், விலங்கென்றும் இழித்தும் பழித்தும் கூறியுள்ளன. இயற்கை நெறிக்கு மாறாகத் துறவு நெறியை வலியுறுத்தின. இக் கொள்கையைக் கடிந்து நாளும் இனிய தமிழால் அகனைந்திணை ஒழுக்கத்தின் பெருமையை முழக்கினர் நாயன்மார்கள். ஈருருவும் ஓருருவமாய அம்மையப்பன் வழிபாடு கூட ஏழாம் நூற்றாண்டிலேயே முதன்மைப்படுத்தப் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

வாழ்க்கை இனியது-இலட்சிய நோக்குடையது; வாழ்க்கையை மகிழ்ந்து நோக்கி இனிமைப் பண்புடையதாக்கி இலட்சிய நிறைவுடையதாக்கிக் கொள்ளும் முயற்சி வேண்டும். இங்ஙனம் வாழும் துறையையே திருவள்ளுவர் ‘வாழ்வாங்கு வாழ்தல்’ என்று குறிப்பிடுகின்றார். அவ்வாறு வாழ்வாங்கு வாழும் நெறியே அருள் நெறியாகும்.

திருஞானசம்பந்தர் அருளிய தமிழ் அருள் நெறித் தமிழ். அப்பரடிகள் வளர்ந்த நெறி நன்மை பெருகு அருள் நெறி. அண்ணல் காந்தியடிகள் நின்று வாழ்ந்த நெறி அருள் நெறி.

அருள் நெறியின் முதல் ஒழுக்கம் அன்பு செய்வது. வாழ்க்கையின் முன்னும் பின்னுமாய முழு இலட்சியம் அன்பு செய்தலேயாகும். இவ்வுடம்பின் அகத்துறுப்புக் களையும் புறத்துறுப்புக்களையும் கூர்ந்து நோக்குவோமாயின் அன்பு செய்தற்கென்றே அவை அமைந்திருத்தலைக் காணலாம். அன்பின் வழியது உயிர்நிலை என்பது குறள். பண்பாளர்க்குக் கட்டும் அன்பு பண்பை வளர்க்கும். பகைவனுக்குக் காட்டும் அன்பு பகையை குறைக்கும். அன்பு செய்யும் ஒழுக்கத்தை ஆண்மகன் முயன்று பெறுகின்றான்.