பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உலகியத்தின் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனியே இன்று அறிவியல் வளர்ந்து வந்துள்ளது; வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதுபோலவே ஆன்மாவைப் பற்றிய அறிவும் வளர வேண்டும். ஆன்மாவைப் பற்றிய அறிவியல் 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு வளராமல் தேக்கம் கண்டுவிட்டது. ஆன்மாவைப் பற்றி அறிவியலைக் கடவுளுடன் சம்பந்தப்படுத்தி “மதம்” என்ற அமைப்புக்குள் சிறைப்படுத்திய பிறகு ஆன்மாவைப் பற்றிய அறிவியல் வளர்ச்சி நின்றுவிட்டது. கடைசியாக ஆன்மாவைப் பற்றி ஆன்மாவின் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்தவர் காரல் மார்க்ஸ். ‘ஆன்மா’, ‘ஜீவன்’ என்ற சொல் வழக்கை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது உண்மையானாலும் “ஆன்மா”வை ஏற்றுக் கொண்டதாகக் கூற முடியாது.

ஆன்மாவைப் பற்றி அறிவியல் பார்வையில் ஆய்வு செய்ய வேண்டும். ஆன்மா என்பது என்ன? ஆன்மா இயற்கையிலிருந்து முகிழ்த்ததா? அல்லது பிறிதொரு பொருளால் படைக்கப்பட்டதா? ஆன்மா தோற்றமும் அழிவும் உடையதா? அல்லது நிலைத்தன்மை உடையதா? ஆன்மா, அறிவுப் பொருளா? அறிவிக்க அறியும் அறிவுப் பொருளா? ஆன்மாவின் இலட்சியம்தான் என்ன?

ஆன்மாவின் வாழ்க்கையில் நன்றும் தீதும் - இன்பமும் - துன்பமும் குறுக்கிடுவது எப்படி? எதனால்? ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? இன்னோரன்ன வினாக்களுக்கு விடை காணும் ஒரு வகையான அறிவியலே ஆன்மவியல். அறிவே வாழ்க்கைக்கு ஆக்கம் தரும். ஆதலால், அறிவியலும் அருளியலும் ஒரு சேர ஆராயத்தக்கன! அறியத் தக்கன! அருளியலின் முடிவுகளே அறிவியலுக்கு வாயில்கள்! அறிவியலின் முடிவுகள் அருளியலுக்கு ஆக்கமாக ஆவன.