பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போன்ற நமது சமயக் குரவர்கள் ஆன்ம நலத்தை வளர்க்கப் பாடுபட்டார்கள். சமயம் நமது சமுதாய நலனை-வாழ்வியலை விட்டு விலகியதில்லை.

வெறும் சம்பிரதாயங்களும், சடங்குகளுமே சமயமன்று. முறையாக-நாணயமாக வாழ்வதில்தான் சமயம் இருக்கிறது. இதனை நமது சேக்கிழார் பெருமான், தாம் அருளிய பெரிய புராணத்தில் மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.

பாத்திரத்தை வெளிப்புறத்தே மட்டும் தேய்த்துத் துாய்மைப்படுத்தினால் போதாது. உட்புறத் துாய்மையும் இருந்தால்தான் அதில் பெய்யப்பெறும் பாலின் துய்மை கெடாமல் இருக்கும். மனிதனுக்குப் புறத்துய்மை இன்றியமையாததுதான். எனினும், அகத் துய்மை அதனினும் இன்றி யமையாததாகும். அத்தகைய அகத்தூய்மையை உருவாக்கத் தான் பிரார்த்தனை-சமயம் எல்லாம் இருக்கின்றன.

இன்று இறைவனிடம் சென்று எதைக் கேட்பது என்பது கூடப் பலருக்குத் தெரிவதில்லை. மளிகைக் கடைக்குப் போய்க் காய்கறியும், காய்கறிக் கடைக்குப் போய் மளிகைச் சாமானும் கேட்பது போலப் பலர் இருக்கின்றனர். இறைவனிடம் நாம் நமது குணப்பெருக்கத்தைக் கேட்க வேண்டும்-குறையுடைய என்னை நிறைவுடையவனாக்கு என்று கேட்க வேண்டும். ஆன்ம வளர்ச்சியைக் கேட்க வேண்டும். ‘இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு வல்லமை தா’ என்றுதான் பாரதிகூடக் கேட்டார்.

நம்மை அறிந்தோ அறியாமலோ புறத்தே சில வளர்ச்சிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு காலூன்ற முயற்சிக்க வேண்டும்.

தொடக்கத்தில், விலங்குகளை எதிர்த்துப் போராடவே கையில் ஆயுதந்தாங்கிய மனிதன் இன்று, அன்பு செலுத்திச் சிரித்து மகிழ வேண்டிய இன்னொரு மனிதனை எதிர்க்கவே