பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமநவமிச் சிந்தனைகள்

449


இறுகப் பிடித்துக்கொள்கின்றனர். அந்த நாற்காலியைப் பிடுங்கவே மற்றவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆக, நாற்காலிப் போராட்டத்திலேயே மனிதநேரமும், ஆற்றலும் செலவாகிறது. இதைத் தவிர்க்க அதிகாரப்பசி இல்லாமல் நாட்டுப்பணியில் நாட்டம் செலுத்துவதே இராமனுக்குச் செய்யும் வழிபாடாகும்.

அடுத்து, இராமன் சென்ற இடங்களில் தோழமைகள் கிடைக்கின்றன. கங்கைத் தலைவன் குகனின் தோழமை ! கிட்கிந்தைத் தலைவன் சுக்கிரீவனின் தோழமை! அடுத்து இலங்கைத் தலைவன் விபீஷணனின் தோழமை! இவர்கள் அனைவரையும் இராமன் நாட்டெல்லை, சாதி, வர்ணம் கடந்து தோழமை கொள்கிறான். இல்லை, இல்லை! தோழமை மட்டுமா கொள்கிறான்? உடன்பிறவாச் சகோதரர்களாக ஏற்றுக்கொள்கிறான்.

“குகனொடு ஐவர் ஆனேம் முன்பு:பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன்அமர் காதல் ஐய, நின்னொடு எழுவர் ஆனேம்!
புகல்அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை”

என்று இராமன் கூறுவதாகக் கம்பன் பாடுவான். இந்த விரிந்த சகோதரத்துவம் இந்த நாட்டில் எங்கிருக்கிறது: தீண்டாமை! எண்ணத் தொலையாத சாதிப் பிரிவினைகள்! மதப்பிரிவினைகள்! இவ்வளவும் கடவுள் பெயராலேயே நடக்கின்றன.

இந்திய மண்ணிலேயே பிறந்து வளர்ந்து வாழும் மனிதர்களைக் கூட, சகோதரர்களாக அங்கீகரிக்க மறுக்கிறோம்! இல்லை, மனிதர்களாகக்கூட அங்கீகரிக்க மறுக்கிறோம்! அசல் - நகல் என்றெல்லாம் பேசுகிறோம்! இராமன்