பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆன்மிகமும் அறிவியலும்

455


கிடைக்கிறது. ஒருமுறை சுற்றினாலும் ஒரு கிலோமீட்டர் நடந்த பயன் கிடைக்கும் இது மட்டுமா?

மனிதனுக்குச் சிந்தனை மாற்றங்கள் எளிதில் வாரா என்பது உளஇயல் அடிப்படை உலகியலில் கிடந்துழுலும் மனிதர்களின் மனம் மடைமாற்றம் பெறத் திருவருட்சிந்தனை பெரிதும் உதவும். மூன்று பிரகாரங்கள் வலம் வரும் பொழுது மெள்ள மெள்ள உள்ளம் மடை மாற்றம் பெற்று, கடவுள் எழுந்தருளியுள்ள கருவறைஅண்மையில் செல்லும் பொழுது ஆன்மா - ஆன்மாவின் உள்ளம் உணர்வு எல்லாம் திருவருட் சிந்தனையில் தோயும். இதனால், உளம்தோய்ந்த பக்தியில் ஆன்மா ஈடுபட முடியும்; ஞானமும் பெறும்!

இறைவன் சந்நிதியில் வழிபாடு செய்து கொள்ளுதல் நல்ல உள்ளப் பயிற்சி; சிந்தனைப்பயிற்சி; ஓர் ஆன்மா, எண்ணவும் சிந்திக்கவும் திறன்பெற்றுவிட்டால் வாழ்க்கையில் முன்னேறுவது உறுதி!

வழிபாடு முடிந்தவுடன் கடவுள் சந்நிதியில் நிலமிசை வீழ்ந்து வணங்குதல் வேண்டும். இங்ஙனம் நிலமிசை வீழ்ந்து வணங்குதல் தாண்டால் எடுப்பது போன்ற முயற்சி. நிலமிசை வீழ்ந்து வணங்கிய பிறகு, கைகளைத் தலைமீது உயர்த்தித் தொழுதல் வேண்டும். இதுவும் கைகளுக்குப் பயிற்சி. அடங்குதல், தாழ்தல் போன்ற நல்லியல்புகள் ஆன்மாவிற்குச் சித்திக்கும்.

கருவறையில் எழுந்தருளியுள்ள கடவுளுக்கு வழிபாடு. கருவறை அகலம் குறைவானது; குறுகிய வாயிற்படி உடையது. வேண்டிய அளவே ஒளி இருக்கும். அதாவது, கூர்ந்துகாண வேண்டிய அளவே ஒளி இருக்கும். இத்தகு கருவறையில் எழுந்தருளியுள்ள கடவுளை வழிபாடு செய்தால் கூர்ந்து கவனித்தல் பயிற்சி, கண்களுக்குக் கிடைக்கிறது. குறுகிய வாயில்வழி காட்சி நிகழ்வதால் ஒருமைப்படுதல், ஒன்றுதல் முதலிய நல்லியல்புகள் ஆன்மாவுக்குக் கிடைக்கின்றன.