பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

35


மிரட்டுகிறார். மீண்டும் இறைவன் பரவையார் இல்லம் நோக்கி நடக்கிறார். இத்தகு நிகழ்வுகள் மூலம் நாம் பெறும் படிப்பினை என்ன? காதல் மணம் புரிந்தவர்கள் பிரிதல் கூடாது என்ற உயரிய தத்துவம் திருக்கோயில் தந்த திருமண வாழ்க்கைத் தத்துவம் என்பதே! இந்தத் தத்துவம் மனையற வாழ்க்கைக்கு அரணாகவும் காதலின்பத்திற்கு ஊற்றாகவும் விளங்குவது அறிக.

தோழமை வாழ்க்கை

காதல் வாழ்க்கைக்கு அடுத்தது தோழமை வாழ்க்கை இல்லை! காதல் வாழ்க்கையினும் மிக உயர்ந்தது தோழமை வாழ்க்கை “நட்பிற் சிறந்தது ஒன்றில்லை” என்று வள்ளுவம் கூறும். திருக்கோயில் இயக்கச் சூழ்நிலையில் நட்புக்கு வாயில்கள் அமைந்துள; நட்பும் வளர்ந்தது, திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் நற்றமிழாரூரருக்குத் தன்னைத் தோழமையாகத் தந்தமையை நாடறிவும். தோழமை எதற்காக? ‘மண் மீது விளையாடத் தோழமை துணை செய்ய வேண்டும். சுந்தரர்க்கு இறைவன் தோழனாக நின்று பொன் தந்தான்; பூவையர் தந்தான். வழக்கமாக எழுந்தருளும் திருக்கோயில் திருவுருவத்தினை நீங்கி, மகிழின் கீழ் இருந்தான்! தூது சென்றான்; ஆளாக இருந்தான் ஆட்களும் பிடித்து அமர்த்தினான். சுந்தரர் “பித்தன்” என்றும் “மகத்திற் புக்கதோர் சனி” என்றும் திட்டித் தீர்த்ததை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டான். இவை மட்டுமா? சேரமான் பெருமாளை அறிமுகப்படுத்தி, மற்றொரு தோழனாக்கிக் கொடுத்தான். அதன் வாயிலாக யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலிய விளையாட்டுக்களில் ஈடுபடும் வாய்ப்பினைத் தந்தான். ஆயினும் தமக்கினிய தோழராகிய ஆரூரர்க்கு வேண்டிய பொன்னைத் தாமே கொடுக்க வேண்டும்; மற்றவர்களிடம் வாங்கக் கூடாது என்ற நட்புறவின் முதிர்ச்சியால் - திருமுருகன் பூண்டித்