பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

458

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விருப்பமும் தத்துவச் சிந்தனையும் அருகி வந்த காலம். புராணங்களிலிருந்து உண்மைகளை அறிந்துகொள்வதற்குப் பதிலாக அதிகமான பாத்திரங்களையும் பாத்திரங்களின் நிகழ்வுகளையுமே புரிந்து கொண்டார்கள். இதனால் புனைவுகளிடத்தில் மக்களின் புலன்கள் நின்றன. புனைவுகளைக் கடந்த தத்துவத்தைத் தொட இயலவில்லை. அவ்வழி சடங்குகளும் தோன்றின. காலப்போக்கில் வாழ்க்கையில் சின்ன சின்னச் செயல்களையே செய்து பழகிப்போனதால் செயற்கரிய செய்தலுக்குரிய எண்ணமும் உறுதியும் இல்லாமல் போய் விட்டது. நாயன்மார்கள் செய்த காரியங்கள் அற்புதங்களாகியதோடன்றி நம்மனோர்க்கு எட்டாதவை என்ற கருத்தும் தோன்றிவிட்டது.

பல புராணங்களின் கரு, வாழ்வியல் உண்மைகளை விளக்கும் தத்துவச் சிந்தனைகளைப் பாத்திரங்கள் வழி எளிதாக்குவதேயாம். ஆயினும் புராணங்கள் அனைத்துக்கும் இத்தகுதி உண்டெனக் கூற இயலாது. சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் மிகச் சிறப்புடையது. பெரியபுராணம் அற்புதமான ஒரு காப்பியம். சமுதாய மாற்றத்திற்குரிய வழியைக் காட்டிய காப்பியம். கடவுள், வாழ்த்துப் பொருள் மட்டுமல்ல; வாழ்வுப் பொருள் என்று காட்டிய இலக்கியம். பக்தி செய்தல், பாடுதல் ஆகியவற்றினும் கைத்திருத்தொண்டு செய்தல் சிறப்பு என்று உணர்த்திய காப்பியம். சாதி வேற்றுமைகளைக் கடந்த ஒருமை நலத்தை உணர்த்திய காப்பியம். சாதிகளை மறந்து சமய அடிப்படையில் ஒருமையை நிலைநாட்டிய காப்பியம். கடவுள், மனைகள் தோறும் நடமாடிய வரலாற்றை உருக்கமாகக் கூறும் காப்பியம். பெரிய புராணத்தில் வரும் அடியார்கள் இந்த வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். குறிக்கோளுக்காகப் போராடியவர்கள்; புகழ் பெற்றவர்கள்; நம்மனோர்க்கு சிறந்த வழிகாட்டிகள். மக்கள் சமுதாயத்தை மிகவும் அருமையுடையதாகிய குறிக்கோள் சார்ந்த வாழ்க்கை