பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

462

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருக் குளத்தின் பெயர் கமலாலயம். இத் திருக்குளம் வற்றியதே இல்லை என்பர்.

கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கு முன்பு திருவாரூரில் தண்டியடிகள் என்று ஒரு நாயனார் வாழ்ந்தார். இவர் பிறவியிலேயே கண்களை இழந்தவர். இவர் காலத்தில் திருவாரூர்த் திருக்கோயில் திருக்குளமாகிய கமலாலயம், சமூக நாகரிகம் தெரியாதவர்களால், திருக்குளத்தின் பயன்பாடு அறியாதவர்களால் குப்பைகள் கொட்டப்பட்டுத் தூர்ந்து போயிற்று என்ற செய்தி தண்டியடிகள் கவனத்திற்கு வந்தது. உடனே தண்டியடிகள் கவலைக்குரியவராகித் திருக்குளத் தூர் எடுக்க ஒரு மனப்பட்டார். கமலாலயத்திற்கு வந்தார். துரர் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரு கம்பை நட்டார். கரையில் ஒரு கம்பை நட்டார்; அந்த இரண்டு கம்புகளுக்கிடையே ஒரு கயிற்றைக் கட்டினார். பின் அந்தக் கயிற்றின் துணை கொண்டு கமலாலயத்திருக்குளத்துத் துார்வையை அள்ளிக் கரையின் கொட்டினார். தண்டியடிகளின் உறுதிப்பாடான ஓயா உழைப்பை இறைவன் கண்டு உவந்து சோழ அரசினிடம் தண்டியடிகள் கருத்தையறிந்து முடித்துவைக்கும்படி அருளிச் செய்தார். கமலாலயம் துார்வை யெடுத்துத்துய்மை செய்யப்பெற்றது.

இன்று தமிழ்நாட்டில் பல திருக்குளங்கள் துார்ந்து போய் உள்ளன; அல்லது தூய்மைக் கேடு அடைந்துள்ளன. திருக்குளங்களுக்குத் தண்ணீர் வரும் வரத்துக்கால்கள் தூர்ந்து போய் உள்ளன. பலஇடங்களில் வரத்துக் கால்கள் - போக்கு வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளன; ஆக்கிர மிப்புக்குள்ளாகியுள்ளன. பொது நலத்தைக் கெடுத்து வாழும் மனோநிலை தமிழரைப் பற்றியது அண்மைக்காலத்திலே யேயாம். இதனால் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன; திருக்குளங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இது வருந்தத் தக்கது.