பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருக்கோயில் வளாகத்தில் வழிப்பறிவும் செய்து விளையாடுகின்றான். என்னே அற்புதம்! வாக்கு மனத்துக்கு அப்பாற்பட்ட ஆற்றல் மிக்க பொருளாகிய கடவுள், வாழ்க்கையின் முதலாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் இனிய தோழனாகி, உற்றுழி உதவியும் விளையாடியும் வாழ்க்கையை உய்த்துச் செலுத்தத் துணையாக இருந்த திருக்கோயில் தத்துவம் ஈடு இணையற்றது.

அன்பின் இயக்கம்

திருக்கோயில் தத்துவம் ஒரு அன்பின் இயக்கம். திருக்கோயில் அன்பினால் எழுந்தது. திருக்கோயில் அன்பினால் வளர்ந்தது. திருக்கோயில், வாழும் மனித குலத்தை அன்பினால் இணைத்தது; ஒருங்கிணைத்தது. அன்பு ஒரு சொல்லன்று. அஃது ஓர் ஆற்றல்! அன்பு ஒரு நுகர்பொருள்! இறைவன் உயிர்களிடத்திலுள்ள அன்பை நுகர்வதற்காக எழுந்தருளிப் போந்தமையை எண்ணற்ற வரலாறுகளில் காண முடிகிறது. திருப்பனந்தாள் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைத் தாடகை என்ற பிராட்டியார், தாமே மலரெடுத்துத் தொடுத்த மலர்மாலைகளைச் சாத்திப் பூசித்து வருகிறார். தொடக்கக் காலத்தில் திருக்கோயில்களில் இன, குல வேறுபாடின்றி, ஆண்-பெண் வேறுபாடின்றி, அனைவரும் தாமே பூசிக்கலாம் என்ற நெறிமுறை இருந்தது! அந்தக் காலத்தில் அம்மையார் பூசித்தார். ஒருநாள் இறைவனுக்குத் தாடகைப் பிராட்டியாரின் அன்பைத் துய்த்து மகிழவும் மற்றவர்க்குப் புலப்படுத்தவும் வேண்டும் என்ற உணர்வு பிறந்தது. தாடகையார் மலர்மாலை எடுத்து இறைவனுக்குச் சாத்தப் புகும் நேரத்தில், அவர்தம் உடை நெகிழ்கிறது. தாடகையாருக்கு அறச்சங்கடம். தாடகையாரின் அறச்சங்கடத்தை அறிந்த பெருமான் குனிந்து மாலை ஏற்றுக் கொள்கிறார்! அதனால் தாடகையாரின் இரண்டு நோக்கங்களும் நிறைவேறிவிட்டன.