பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

470

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனித நேயத்தைக் கொள்கையாக - கோட்பாடாக ஏற்றுக் கொண்டு உலகந்தழிஇ வாழும் இலட்சியத்தை அறிமுகப்படுத்தின. மதங்களின் குறிக்கோள் உயிர்க்குல ஒருமைப்பாடே! அண்ணல் காந்தியடிகள் “ஒரு மனிதனை இன்னொருவரிடமிருந்து பிரிப்பதற்காக மதங்கள் ஏற்படவில்லை. மனிதர்களைக் சேர்த்து வைப்பதுதான் அவற்றின் நோக்கம்” என்று கூறினார். அருட்பிரகாச வள்ளலார்,

“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி யுள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உகக்கின்றார்
யாவர்.அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்என நான் தேர்ந்தேன்”

என்று கூறியருளினார்.

இந்தப் பரந்த உலகின் ஜனசமுதாயத்துடன் ஒத்து வாழ நெறிமுறைகளை வகுத்து ஓதும் மதங்களே உண்மையில் சிறந்த மதங்கள். நீண்டநெடிய வரலாற்றுப் போக்கில் சமூகத்தில் தோன்றும் உளைச்சல்கள், இயலாமை, தேக்கம் ஆகிய காரணங்களால் இந்த மண்ணுலகத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்து நாள்தோறும் உலகத்தைப் புதுப்பித்து இயக்குவது மதத்தின் வேலை. இந்த உலகின் வளர்ச்சியில் மாற்றங்களில் ஆர்வம் காட்டாதுபோனால் உலகம் தேங்கிப் போகும். நமது உலகம் முன்னேறி வருகிறது; அறிவு விசாலமாகிறது. 5000 வருடங்களுக்கு முன் தோன்றிய மதங்கள்கூட இன்றும் நின்று நிலவுகின்றன. உலகின் பல்வேறு மதங்களைக் கண்ட தீர்க்கதரிசிகள் என்றும் ஏற்றொழுகக் கூடிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இந்தியாவிலும், உலகிலும் நின்று நிலவும் மதங்களைப் போற்றி ஏற்று ஒழுகுவோமாக; இந்த உலகம், போர்கலகங்களால் அழிந்து போகாமல் நிலைபெறச் செய்ய உத்தம தீர்க்கதரிசிகளை - மதங்களைக் கண்ட மாமனிதர்களை நினைந்து போற்றுவோமாக!