பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மனித குலத்திற்கு தொண்டு செய்வோம்:

471



இன்று இந்தியாவிலும் சரி, உலகிலும் சரி பலநூறு மதங்கள் நிலவுகின்றன. வரலாற்றுக்கு முந்திய ஷிண்டோ ஹீப்ரு மதங்களைப் பின்பற்றுவோரும் உள்ளனர். ஆயினும் உலகில் இந்து மதம், பெளத்த மதம், சமண மதம், கிறிஸ்துவ மதம், இசுலாம் மதம் ஆகியன புகழ்பெற்ற மதங்கள். பலகோடி மக்களால் பின்பற்றப்படுபவை. இந்த மதங்கள் அனைத்தும் ஒருகுரலாக “மனிதநேயம்! மனிதகுல ஒருமைப்பாடு” என்றே பேசுகின்றன.

இந்த உலகின் தொன்மையான மதங்களுள் மிகவும் பழைமை வாய்ந்தது இந்து மதமே. இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முந்தையது; சற்றேறக்குறைய 50 கோடி மக்கள் பின்பற்றி வரும் மதம். உண்மையைச் சொன்னால் இந்து மதம் ஒரு மதமே அல்ல. இந்து மதம் ஒரு வாழ்க்கைமுறை. இந்த மதக் கோட்பாடுகள் கெட்டிதட்டிப் போனவையல்ல; நெகிழ்ந்து கொடுப்பவை. மற்ற மதநெறிகளையும் ஏற்று ஒழுகுவதற்கு அங்கீகரித்தது இந்து மதம் மட்டும்தான்; இந்த மதம் உலகின் எந்த ஒரு சிந்தனையையும் ஏற்கும். அது போல வழிபாட்டு முறைகளையும்கூட ஏற்றுக்கொள்ளும். இந்த சமயம் காலந்தோறும் மாறிமாறி வளர்ந்து வந்திருக்கிறது என்பது மாபெரும் உண்மை. அதனாலேயே இந்தியா பல்வேறு மதங்கள் தோன்றவும் பலமதங்கள் சங்கமமாகவும் இடமளித்து வந்துள்ளது. இனியும் இடம் கொடுக்கும். பாரதி வாக்கில் இந்த மதத்தின் கொள்கை,

“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி”

என்று ஒலிக்கிறது.

இந்தியாவில் தோன்றிய மதங்களில் இன்று தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவலாகப் பரவுயுள்ள மதம் பெளத்தமேயாகும். பெளத்த மதத்தைக் கண்டவர் புத்தர் பிரான். பெளத்தமதம் தோன்றிய காலம் சற்றேறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்போகும். ஒரு