பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

472

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பேரரசராகிய புத்தர் துக்கத்தில் துயரத்தில் கிடந்துழலும் மக்களைக் கண்டு வருந்தி முடியைத் துறந்து போதி மரத்தடியில் அமர்ந்து ஞானத்தை உணர்ந்தார்.

இன்று உலகில் நிலவும் மிகப்பெரிய மதம் பெளத்தமதம். தூயதுறவில் முகிழ்த்த மதம், சற்றேறக்குறை 75 கோடி மக்கள் பின்பற்றுகிறார்கள். உலக வரலாற்றில் போரற்ற உலகம், துறவு ஆகிய சிந்தனைகளைத் தோற்றுவித்து வளர்த்த பெருமை பெளத்தத்திற்கு உண்டு. “பகைமையினால் பகை போகாது. தன் வேரைத் தானே கல்லாதே!” என்று உபதேசிக்கிற பெளத்தம் இந்த உலகிற்கு அணியாகும்.

உயிர்கொண்டு உலாவும் எந்த ஒன்றுக்கும் தீங்கு செய்யாதே என்று அறிவுரை வழங்கியது சமண சமயம். சமண மதத்தைக் கண்டவர் மகாவீரர். சமண மதம் தோன்றி 2600 ஆண்டுகளாயின. சமண மதத்தின் பேரறம் கொல்லாமையேயாகும். “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்று திருக்குறள் கூறுகிறது. “விரோதி என்பதாக ஒருவரைப் படைத்தில்லாதவனே வீரன்” என்ற சமணம் மனிதகுலத்திற்குக் கிடைத்த பெரிய அரண்.

அடுத்து நம்முடைய கவனத்திற்கு வருவது கிறிஸ்தவ மதம். 1950 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதம் இயேசு பெருமானால் நிறுவப்பெற்றது. இன்று கிறிஸ்தவ சமயம் பெரும்பான்மையான உலக மக்களால் பின்பற்றப்படுகிறது. இன்றைய உலகில் கிறிஸ்தவமதம் சேவை மதமாகப் புகழ்பெற்று விளங்குகிறது. ஏசுநாதர்,

“தீமைக்குத் தீமை செய்யவேண்டாம். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு ! பகைவர்பாலும் மெய்யன்பு கொள்ளுங்கள். உங்களைப் பகைப்பவருக்கும் நன்மை செய்யுங்கள்” என்று போதித்தார். சமாதானம் செய்து வைப்பவர்கள் பாக்கியவான்கள் என்று ஏசு அருளிச்செய்துள்ளார். இன்றைய சூழ்நிலைக்கு ஏசுபிரான் அருளிச் செய்துள்ள அறிவுரைகள் மருந்தென விளங்குகின்றன. துன்புறுவோருக்கு உதவுவதைக் கடமை