பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

37


பெருமான் திருமேனியை வளைத்தது அன்பின் ஆற்றல் அல்லவா? இங்ஙனம் திருமேனி வளைந்த இறைவன் நிமிராமலேயே இருந்துவிட்டான். இதனைக் கண்ட சோழப் பேரரசு, பெரிய சங்கிலிகளைப் போட்டு யானைகளைக் கட்டியிழுக்கச் செய்தது! இறைவன் திருமேனியோ நிமிர வில்லை! இந்தச் செய்தி திருக்கடவூரில் வாழ்ந்த குங்குலியக்கலயர் என்ற பெருமகனாருக்கு எட்டுகிறது. அவர் திருப்பனந்தாள் வருகிறார். இறைவனைக் கூர்ந்து பார்க்கிறார். குங்குலியக் கலையர் அன்பில் விளைந்த ஆன்மா உடையவர். அவர் இறைவன் திருமேனியை நிமிர்ப்பதற்காகத் தமது கழுத்தில் ஒரு கயிற்றைப் போட்டுக் கொண்டு இழுக்கிறார்! உடன் பெருமான் திருமேனி நிமிர்கிறது. ஏன் நிமிர்கிறது? பெருமானையும் குங்குலியக் கலயரையும் பிணைத்திருந்த கயிறு குங்குலியக் கலயரின் உடலை வருத்துமே என்று கருதிப் பெருமான்தன் திருமேனி நிமிர்ந்தார். தாடகையார் மானம் காப்பாற்ற வளைந்தார்; குங்குலியக் கலயர் உடலைப் பாதுகாக்க நிமிர்ந்தார்.

"............மாலை சாத்தும்
தாடகைமானம் காப்பான் தாழ்ந்து, பூங்கச்சிட்டு ஈர்க்கும்
பீடுறுகலயன் அன்பின் நிமிர்ந்த எம்பிரான் ஊர்”

என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

திருநீலநக்கநாயனாருடைய மனைவி, சிலம்பி நீங்க, வாயால் ஊதியதை அன்பின் விளைவாக ஏற்றுக்கொண்ட அருமைப்பாட்டையும் பிறிதொரு நிகழ்விற் காண்கிறோம். கண்ணப்பர் அன்பினால் விளைந்து, அன்பே உருவமாக விளங்கியதைத் திருக்காளத்தித் திருக்கோயிற் சூழலில் காண முடிகிறது! திருக்காளத்தித் திருக்கோயிற் சூழ்லில் விளைந்த அற்புதங்கள் எண்ணற்றவை. அவையனைத்தும் ஆன்மாக்களை உயர்நெறியில் உய்த்துச் செலுத்தக் கூடியவை!