பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

480

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனிதர்களாக நடமாடினர். மனிதனின் ஆன்மா, ஆண்டவனின் தீப ஒளியாய் விளங்க வேண்டும். இத்தகைய ஆன்மிகக் கல்வியை, ஆன்மிக ஞானத்தை அல்லது ஆன்மிகத்தில் சிறந்தாரைத் தேடித்தான் காணவேண்டும்.

ஆதலால், ஆன்மிகக் கல்வி என்ற பெயரில் தேவார, திவ்வியப் பிரபந்தங்களையும் புராணங்களையும் முதல் நிலையில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த இயலாது. இவை உயர்ந்த ஞான அனுபவத்தின் பொழிவுகள். இவற்றை அனுபவிக்க தனி ஞானம் வேண்டும்.

இப்போதே பள்ளியில் உள்ள பாடப் புத்தங்களில் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் ஆன்மிக வளர்ச்சிக்குரிய பாடங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தலே ஒரு நல்ல பணி பள்ளிகளில் நீதிபோதனைக்கு என்று ஒரு வகுப்பு ஒதுக்கப்பெற்றுள்ளது. அந்த வகுப்பு இப்போது நடப்பதே இல்லை. அந்த நீதி போதனை வகுப்பை முதலில் ஆன்மிகக் கல்விக்குப் பயன்படுத்தலாம். திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நூல்களும் மார்க்கஸ் அரோலியஸ், ஜேம்ஸ் ஆலன், சோக்ரதர், விவிலியம், குர்-ஆன், கீதை முதலியனவும் முதலில் ஆன்மாவைப் புரிந்து கொள்ள உதவி செய்யும், ஆன்மாவை மெள்ளத் தன்னிலையில் உய்த்துச் செலுத்திப் பழக்கும். அதோடு பள்ளியாக இருப்பதால் ஆன்மிகக் கல்வியை ஒழுக்கமாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்புக்கள் உண்டு. ஆன்மிகம் என்பது ஆன்மாவின் தரத்தை உயர்த்தவதேயாகும். இந்த முயற்சியை, ஆன்மிகப் பண்ணைகளாக விளங்கும் திருக்கோயில்களில் தொடங்குவதைவிடப் பள்ளிகளிலேயே தொடங்குவது நல்லது. அதற்குத் தேவையான நிதி உதவிகளைத் திருக்கோயில்கள் செய்யலாம். இதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிந்தனையில் கொள்ளவேண்டும் என்பது நமது விருப்பம்.