பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

482

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாங்கு வாழ எண்ணற்ற நுகர்பொருள்கள் தேவை. பொருள்களை விரும்பி அடைந்து அனுபவித்து வாழ்வதுதானே வாழ்க்கை பொருள்களை விரும்புவது அவாவா? ஆசையா? பொருள் இல்லையாயின் வாழ்க்கையே இல்லையே! அப்படியானால் அவற்றை விரும்புவது தவறா? இல்லை! இல்லை! தேவைக்கு விரும்புவது ஆசையல்ல. எந்தப் பொருளையும் தேவைக்கு விரும்புவது ஆசையல்ல. தேவைக்காக அல்லாது சொத்தாக ஆக்க விரும்புவது ஆசை.

பொருள், வாழ்க்கையை நடத்த ஒரு தேவை. தேவைக்காக விரும்புவது - தேடுவது அறம். வாழும் நெறியும் கூட! அங்ஙனம் இன்றி - துய்ப்பனவும் உய்ப்பனவும் இன்றிச் சேமித்தலுக்காகப் பொருள்களைத் தேடுதல் ஆசை குற்றம். இத்தகு ஆசை அறவே தீது, பொருள் ஒரு கருவியேயன்றி வேறுதகுதி அதற்கு இல்லை.

இந்த உலகம் பரந்தது. பலரிடம் பல பொருள்கள் இருக்கலாம். அவை, அவர்களின் தேவையாக இருக்கலாம். அல்லது ஆரவாரத் தோற்றத்திற்காகவும் வைத்திருக்கலாம். நமக்கு அப்பொருள்கள் தேவையில்லை. நமக்கு ஏன் அப்பொருளின் மீது ஆசை? அப்படியே ஆசைப்பட்டாலும் அப்பொருளை அடைவதற்குரிய தகுதியும் நம்மிடம் இல்லை. ஏன் ஆசை?

பொருள்கள் நுகர்வுக்காக, நுகர்வுக்காக மட்டுமே! அங்ஙனமின்றி மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று சிலர் பொருள்களின்மீது ஆசைப்படுவானேன்? ஆளுமை இல்லாத பொருள் சார்ந்த பெருமை எதற்குப் பயன்படும்? ஒன்றுக்கும் ஆகாது.

ஆசை, எரியும் நெருப்புப் போன்றது. குடி, பிறப்பு, மானம் எல்லாவற்றையும் அழிக்கும். ஆசைக்கு வெட்கம் இல்லை! நாணம் இல்லை. ஆசை எப்போதும் தற்சார்பானது.