பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நெறியும்-லெனினியமும்

495


“தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது”

என்று கூறியுள்ள குறள்களில் மன்னுயிர் என்றே குறிப்பிடுகிறார் மன்னுயிர் என்றால், நிலைபேறான தன்மையுடைய உயிர் என்றே பொருள்படும். ஆதலால், உயிர்கள் உடம்பைக் கருவியாகக் கொண்டே வாழ்ந்து கடமைகளைச் செய்கின்றன என்பது பெறப்படுகிறது. உடம்பு என்ற சொல்லினும் “உடு” என்ற முதனிலைச் சொல் உயிர் எடுத்துக் கொண்ட உடையே உடம்பு என்பதைத் தெளிவாக விளக்குகிறது. உயிர் உடம்பினைக் கொண்டு தன்னுடைய மேம்பாட்டுக்குரிய கடமைகளைச் செய்கின்றது என்பதே தமிழ்க் கருத்து. உயிர் என்றும் உள்பொருள் என்றே தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் ஒரு முகமாகக் கூறுகின்றன. தாயுமானவரும்.

 :“என்று நீ அன்று நான்”

என்றார். அதாவது தோற்றத்தால் உயிரும் கடவுளும் ஒன்றற்கொன்று பிந்தியது மல்ல; காலத்தால் ஒத்த இயல்புள்ளவை என்று கூறுகிறார்.

ஆதலால் உயிர். என்றும் உள்பொருள். அதற்குப் பிறப்புமில்லை; மறைவுமில்லை என்பது தெளிவாகிறது. அந்த உயிர், கடவுளைப் போல கால எல்லைகளைக் கடந்தது. அந்த உயிர் உடலைக் கருவியாகக் கொண்டு இயங்குகிறதே தவிர உடலுக்கு உயிர்த் தன்மை இல்லை. உடலுக்கு உயிர்த்தன்மை உண்டெனக்கூறும் நெறி தமிழ் நெறியல்ல. உயிர் பிரிந்த வழி உடல் உயிர்ப்பின்றி-பேச்சின்றிப் பிணமாகக் கிடப்பதைப் பார்க்கிறோம். உடலே உயிராக இருக்குமாயின் இந்த அவல நிலை ஏன்? ஆதலால், உயிரை உள்பொருள் என்று ஒத்துக் கொண்டு அந்த அடிப்படையில் மேலும் லெனினியத்தை ஆராய்வோம். உயிரைப் பற்றிய தெளிவான முடிவு ஏற்பட்டாலே லெனினியத்தின் முழு வடிவத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும்.