பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

496

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உயிர் பற்றிய கொள்கையில் பெளத்த நெறி சற்று வளர்ந்த கொள்கையைக் கண்டது. அதாவது, இவ்வுடம்பின் வேறாய் எல்லாவற்றையும் அறிவதாகிய அறிவு உண்டு எனக்கொண்டு, அறிவை ஒத்துக் கொண்டது. ஆனால் உயிர் உண்டென்ற கொள்கை பெளத்தத்திற்கு இல்லை. அறிவு என்பது ஐம்பொறிகளுக்கும் புலப்படுவதில்லை. அறிவு, ஓர் அனுபவத்தின் மையம். “யான் இதனைக் கண்டறிந்தேன்” என்றும், “கேட்டறிந்தேன்” என்றும், “சுவைத்தறிந்தேன்’ என்றும், நுகர்த்தறிந்தேன்” என்றும், “தொட்டறிந்தேன்’ என்றும் கூறுவதனால், அறிவதை அனுபவமாகவும், அந்த அனுபவத்தைக் கொண்ட உயிர் ஒன்று தனியே உளது. என்பது பெறப்படுகிறது. “யான்” என்றும், “எனது” என்றும் உரிமை கொண்டாடுவதே உயிர்தானே : “யாம் அறிவதில்லை. அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற” என்று திருக்குறளில் “யாம்’ என்று சுட்டிக்கொண்ட ஓர் உயிர்க்கு அறிவு என்ற அறிதற்கருவி துணைநின்று தொழிற்படுவதே பெறப்படுகிறது.

திருவள்ளுவர் நமது திருக்குறளில் அறிவை உடைமையாகப் பேசுகிறார். “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பது குறள். உடைமை என்றதனாலேயே உடையவன் ஒருவன் உண்டென்பது வெளிப்படையான உண்மை. உயிர்க்குரிய பண்பாகும். “நான் அறிந்தேன்” “என்னறிவு” என்னும் வழக்கில் “நான்” என்பதொரு பொருளும், அதனோடு ஒற்றுமைப்பட்ட அறிதற் பண்பும், உணரத்தக்கன. அறிவு ஒரு பண்பேயன்றிப் பொருளாகாது. உடம்புடன் பொறிகளும், வளமுமே உயிர். “உயிரெனத் தனியே வேறொரு பொருளில்லை” என்பது பெளத்தம். உடல் உறக்கத்தில் கிடக்கும்பொழுது அறிவு விளங்குவதில்லை. உறக்கத்தின்போது அறிவு செயற்படுதலுமில்லை. ஏன்? பல சமயங்களில் அறியாமையோ என்று கருதக்கூடிய சில செயல்களும் திகழ்கின்றன. உடலும் பொறிகளும் அவை