பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நெறியும்-லெனினியமும்

499


கலந்து அனுபவிக்கும் பொழுதே, அனுபவம் தோன்றுகிறது. வாழ்க்கை சிறக்கிறது. இருவகைப்பட்ட இன்பத்திற்கும் இந்த இயல்பு உண்டு என்று, பெருமக்கள் கூறியுள்ளனர்.

“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.”

என்பது திருக்குறள்.

பெண் ஒரு பொருள்தான். ஆனால், வேறுவேறு இயல்பு பெண்ணுக்கு உண்டு. ஐம்பொறிகளும், தனித்தனியே அந்தப் பெண்ணின் ஓரியல்பைத்தான் அனுபவிக்க முடிகிறது. ஒரு பொறிக்கு ஒரியல்பு அனுபவத்திற்கு வராமையின் அந்த இயல்பு இல்லையென்றோ. பொருளில்லை என்றோ கூறமுடியாது. ஏன்? அறிவையே கூட நேரடியாகக் காண முடியாது. அறிவை, செயற்பாடுகளிலேயே காணமுடியும். மணம், கண்ணால், பார்க்கக் கூடிய ஒன்றன்று. மூக்கால் நுகர்ந்து அனுபவிக்கக் கூடியதே. மணம். கண்ணால் பார்க்கக் கூடிய தின்மையின் காரணமாக இல்லையென்று கூற முடியாது. ஏன்? உயிரியலில் இன்றியமையாத் தேவையாகிய காற்றே கண்ணின் காட்சிக்கு வருவதன்று. ஒரு பொருள் உள்பொருளா? இல்பொருளா? என்பதை ஒரு பொறியினைக் கொண்டு அளந்து கூறுதல் கூடாது.

ஐம்பொறிகளாலும் கண்டு ஆராய்ந்து, ஐம்புலன்களாலும் கண்டுணர்ந்து, அவைகளுக்கும் மேலாய அறிவாலும் ஆராய்ந்து முடிவெடுத்தலே ஏற்புடையதாகும். கட்புலனுக்கும் பகுப்பொருள்கள் மட்டுமே காட்சிக்கு வரும். அடுத்து, வண்ணமும் ஒளியும் காட்சிக்கு வரும். சில மெய்ப்பாடுகளும் கட்புலனுக்கு வருதல் கூடும். நுண்பொருள்களும் பெரும்பாலான தன்மைகளும் அல்லது குணங்களும், உணர்வுகளும் கட்புலனுக்கு வாரா. ஆதலால், கண்ணால் காண்பன மட்டுமே, உண்மையென்ற அடிப்படையே குறைவுடையதாகும்.